/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அணைக்கு வரத்து சரிவு; மதகுகள் அடைப்பு
/
அணைக்கு வரத்து சரிவு; மதகுகள் அடைப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:13 PM

வால்பாறை; சோலையாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
வால்பாறையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. தொடர்ந்து பெய்த கனமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த மாதம், 26ம் தேதி நிரம்பியது. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதே போல் ஆழியாறு, பரம்பிக்குளம், காடம்பாறை, மேல்ஆழியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. சோலையாறு அணையில் அதிகபட்சமாக, 164 அடி வரை நீர் தேக்க முடியும்.
இந்நிலையில் கடந்த மாதம், 27ம் தேதி முதல் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் வால்பாறையில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால், மதகுகள் அடைக்கப்பட்டு, கேரளாவுக்கு உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைந்த நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 163.60 அடி இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,369 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 2,829 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது. அதிகபட்சமாக மேல்நீராறில், 17 மி.மீ., மழையளவு பதிவானது.
பணிகள் தீவிரம்
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில், மழையின் தீவிரம் குறைந்து, லேசான சாரல் மழை மட்டுமே பெய்கிறது. இதனால், விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமடைந்துள்ளனர். இந்நிலையில், விவசாய தோட்டங்களில் வடியாமல் தேங்கியுள்ள மழைநீரை, வடிகால் வசதி ஏற்படுத்தி வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாழைத்தோப்பு, பப்பாளி, மரவள்ளி கிழங்கு வயல்களில் தேங்கியுள்ள மழைநீரால் பயிர் பாதிக்கும் என்பதால், விவசாயிகள் வடிகால் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.