/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டுநீர் பாசனத்தால் பயிர் விளைச்சலில் முன்னேற்றம் பயிற்சி முகாமில் தகவல்
/
சொட்டுநீர் பாசனத்தால் பயிர் விளைச்சலில் முன்னேற்றம் பயிற்சி முகாமில் தகவல்
சொட்டுநீர் பாசனத்தால் பயிர் விளைச்சலில் முன்னேற்றம் பயிற்சி முகாமில் தகவல்
சொட்டுநீர் பாசனத்தால் பயிர் விளைச்சலில் முன்னேற்றம் பயிற்சி முகாமில் தகவல்
ADDED : ஆக 28, 2025 10:50 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, சொட்டுநீர் பாசன அமைப்பு பராமரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
ஆனைமலை அருகே கம்பாலபட்டியில், 'அட்மா' திட்டத்தின் கீழ் 'சொட்டுநீர் பாசன அமைப்பு பராமரித்தல்' தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி, அரசூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், உழவரை தேடி வேளாண்மை துறை முகாமுடன் இணைத்து வழங்கப்பட்டது.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜலிங்கம் பேசியதாவது:
சொட்டுநீர் பாசன கருவிகள் அமைப்பில், ஒரு தென்னை மரத்துக்கு, 2 மி.மீ., விட்டமுடைய, 3 முதல், 6 எண்ணிக்கையில் சிறு டியூப்களை சொட்டுவான்களுக்கு மாற்றாக பயன்படுத்தினால், பாசன நீர் மிகுதியான தருணங்களில், மரத்துக்கு, 400 லிட்டர் வரை ஆழ்குழாய் கிணறுகளில் சேமிக்கலாம்.
இதனால், மரத்துக்கு ஒரு நாளைக்கு தேவையான, 60 லிட்டர் நீர் தேவையை, வறட்சி காலங்களிலும் விவசாயிகளால் வழங்க இயலும். மேலும், சமச்சீர் உரங்களை குறுகிய இடைவெளியில் (அதிகபட்சம் 15 நாட்கள் இடைவெளியில்) வென்சுரி அமைப்பில் வழங்குவதால், இடு பொருட்களுக்கான முதலீடு, பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலில் முன்னேற்றம் ஏற்படும்.
மக்கிய தொழு உரம் 5 கிலோ, நுண்ணுாட்ட கலவை ஒரு கிலோ அல்லது வேர் வழி தென்னை டானிக் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் இட வேண்டும்.களைக்கொல்லிகளை பயன்படுத்தும் விவசாயிகள், தக்கை பூண்டு, சணப்பை, கொள்ளு போன்றவற்றை பயிர் செய்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்து களைக்கொல்லியால் மண் நஞ்சாவதை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு, பேசினார்.
ஆனைமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் பேசியதாவது:
தெளிப்பு நீர் பாசனம் அரசு மானியத்தில் விவசாயிகள் பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. தற்போது, சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பினாலும் வேளாண்துறை வாயிலாக மானியம் பெறும் வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இரவு நேரங்களிலும், வெளியில் இருந்தாலும் மொபைல்போன் வாயிலாக மின்மோட்டார் இயக்கும் தானியங்கி பாசன வசதி அமைப்பு அமைக்க, 22,000 ரூபாய் மானியம் பெறும் வசதி 2025 -26ம் ஆண்டு சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் அலுவலர் ஸ்ரீமதி, சொட்டுநீர் நிறுவன அலுவலர் கனகராஜ், துணை வேளாண் அலுவலர் சிவக்குமார், உதவி பொறியாளர் ஜனப்பிரியா, வேளாண் வணிகத்துறை அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர்.
'அட்மா' திட்ட உதவி மேலாளர் அர்ஜூன்குமார், கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் பயிற்சிக்கான ஏற்பாடு செய்தனர்.