/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யல் ஆற்றின் கரைகளில் பனை விதை நடவு துவக்கம்
/
நொய்யல் ஆற்றின் கரைகளில் பனை விதை நடவு துவக்கம்
ADDED : செப் 30, 2024 11:50 PM

கோவை : கோவை மாநகராட்சி பகுதி வழியாக செல்லும் நொய்யல் ஆற்றின் கரைகளில் பனை விதை நேற்று விதைக்கப்பட்டது. இப்பணியை, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கூட்டாக நேற்று துவக்கி வைத்தனர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க, ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரைகளிலும், வாய்க்கால் கரையிலும், பனை விதைகள் நடும் பணி நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 76வது வார்டு தெலுங்குபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் இரு கரையிலும் முதல்கட்டமாக, 1,000 பனை விதைகள் பதிக்கும் பணி துவக்கப்பட்டது.
கோவை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், பனை மேம்பாட்டு இயக்கம் மூலமாக, பனை விதைகள் பெறப்பட்டன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''மாவட்ட அளவில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், மாநகராட்சி பகுதியில் மட்டும், 25 ஆயிரம் பனை விதை நடவு செய்யப்படும்.
நொய்யல் கரைகள், குளக்கரைகள் மற்றும் வெள்ளலுார் கிடங்கு எல்லை பகுதிகளில், நடவு செய்யப்படும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த், உதவி இயக்குனர் நந்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.