ADDED : டிச 15, 2024 11:07 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில் உள்ள நீரோடையை சுத்தப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பாளையம் கிராமத்தில், விவசாய பரப்பு அதிகம் உள்ளது. இங்கு தென்னை மற்றும் தக்காளி சாகுபடியல் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில், பயிர் சாகுபடிக்கு, இங்கு உள்ள நீரோடையில் உள்ள தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது நீரோடையில் தண்ணீர் இல்லாததால், முறையான பராமரிப்பு இன்றி, செடி, கொடிகள் அதிக அளவு வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை பெய்யும் நிலையில், இந்த நீரோடையை சுத்தம் செய்ய வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'இந்த நீரோடையை சுத்தம் செய்தால், மழை நீரை சேமித்து வைத்து தண்ணீர் பற்றாக்குறையின் போது பயன்படுத்த உதவியாக இருக்கும். இதனால், இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. மேலும், விளைச்சல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்,' என்றனர்.
