ADDED : ஏப் 18, 2026 11:13 PM
கிணத்துக்கடவு: சொக்கனூர் ஊராட்சியில் குறைவான மின்னழுத்தம் இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சொக்கனூர் ஊராட்சியில், 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சொக்கனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் குறைவான மின்னழுத்தம் காரணமாக, பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மின்னழுத்த குறைபாடால், சில இடங்களில் அடிக்கடி மோட்டார் பழுதாகிறது. இதனால் வெயில் காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படுவதுடன், பயிர் வாடுகிறது.
இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் குழந்தைகள், முதியவர்கள் தூங்கமின்றி சிரமப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைய வாய்ப்புள்ளது.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து குறைவான மின்னழுத்தத்தை சரி செய்ய வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
