ADDED : மே 21, 2026 09:37 AM
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் சுரங்க பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஹிந்து முன்னணி அமைப்பினர், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாவட்டத்தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வகையில் சுரங்க நடைபாதை உள்ளது. கடந்த, ஓராண்டுக்கு மேலாக இந்த பாதை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், காலை, மாலை நேரத்திலும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்களுக்கும் சாலையை கடக்கும் போதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சுரங்க நடைபாதையை பயன்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
* குளப்பத்து பகுதி விவசாயிகள் கொடுத்த மனுவில், 'அறுவடை செய்யப்பட்ட நெல், ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, எடை போட, 45 - 50 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர்.
அவர்கள் கேட்கும் தொகை கொடுக்காவிட்டால், நெல் மூட்டை பிடிப்பது இல்லை. அரசு சார்பில், மூட்டை பிடிக்க குறிப்பிட்ட பணம் வழங்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டு உள்ளனர்.
