/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷனில் வாங்காத பொருளுக்கும் தகவல் கடைகளில் ஆய்வு அவசியம்
/
ரேஷனில் வாங்காத பொருளுக்கும் தகவல் கடைகளில் ஆய்வு அவசியம்
ரேஷனில் வாங்காத பொருளுக்கும் தகவல் கடைகளில் ஆய்வு அவசியம்
ரேஷனில் வாங்காத பொருளுக்கும் தகவல் கடைகளில் ஆய்வு அவசியம்
ADDED : ஜன 16, 2025 11:30 PM
பொள்ளாச்சி ;தமிழகத்தில் உள்ள சில ரேஷன் கடைகளில், கார்டுதாரர்கள் வாங்காத பொருளுக்கும் பதிவு செய்து, அவற்றை பதுக்கி, கள்ளமார்க்கெட்டில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து, உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதற்காக, அனைத்து கடைகளில் கைரேகை பதிவுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, கார்டுக்கு உரியவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.
இருப்பினும், நகர் மற்றும் நகர்ப்புறம் ஒட்டிய சில கடைகளில், 30 சதவீத அளவிலான கார்டுதாரர்கள், முழுமையாக அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்கிச் செல்வதில்லை.
அதிலும், நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்கள் அரிசி, கோதுமை, பாமாயில் ஆகிய பொருட்களை வாங்க முனைப்பு காட்டுவதில்லை.
இதனை சாதகமாக்கிக் கொள்ளும் ரேஷன் கடைக்காரர்கள், கார்டு தாரர்கள் வாங்காத பொருளுக்கும் 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்து விடுகின்றனர்.
இதற்கான எஸ்.எம்.எஸ்., கார்டுதாரர்களை சென்றடைந்தாலும்,'வாங்கிய பொருளுக்கு மட்டும் தானே தொகை கொடுத்தோம். வாங்காத பொருளுக்கு தகவல் வந்தால் பிரச்னை இல்லையே,' என்று கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.
அதேநேரம் அப்பொருளுக்கான தொகையை, கடைக்காரர்களே செலுத்தி அரிசி, கோதுமை உள்ளிட்டவைகளை பதுக்கி வைக்கின்றனர். பின்பு, கள்ள மார்க்கெட்டிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பெரும்பாலான ஊர்களில் அரசியல் கட்சியினர் உடந்தையுடன் இத்தகைய மோசடி நடந்து வருகிறது.
இது குறித்து, கார்டுதாரர்களும் கேள்வி எழுப்புவதில்லை. பதுக்கி வைக்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்டவை மொத்த வியாபார கடைகளுக்கும், உள்ளூரில் செயல்படும் இட்லி மாவு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பி லாபம் பார்க்கின்றனர்.
இதனைத்தடுக்க, குடிமைப்பொருள் வழங்கல் துறையில், மாவட்டம்தோறும், தனி கண்காணிப்பு குழு அமைத்து, ரேஷன் கடைகள்தோறும் ஆய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.