குடிநீர் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் இன்ஸ்பெக்டர், பிளம்பர் கைது
குடிநீர் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் இன்ஸ்பெக்டர், பிளம்பர் கைது
ADDED : மார் 06, 2026 06:17 AM

கோவை: குடிநீர் இணைப்பு கொடுக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற குடிநீர் இணைப்பு இன்ஸ்பெக்டர், பிளம்பரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கோவை கெம்பட்டிக்காலனியை சேர்ந்தவர், 65 வயது முதியவர். இவரது வீடு மாநகராட்சி, 80 வார்டில் உள்ளது. வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து, இவரை மாநகராட்சியின் குடிநீர் இணைப்பு இன்ஸ்பெக்டர் மோகன், 42, ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வரும் பிளம்பர் ஈஸ்வரன், 40 ஆகியோர் தொடர்பு கொண்டனர்.
குடிநீர் இணைப்பு கொடுக்க ரூ.5,000 லஞ்சம்கேட்டனர். லஞ்சம் தந்தால் மட்டுமே இணைப்பு கொடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து முதியவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் வழங்கிய ரசாயனம் தடவிய பணத்தை இருவரிடமும் கொடுத்தார். பணத்தை இருவரும் பெற்ற பின், மறைந்திருந்த கூடுதல் எஸ்.பி., ராஜேஷ் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
