/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.5 கோடியில் உள்விளையாட்டு அரங்கு அமைவதால் உத்வேகம்! விரைந்து முடிக்க வீரர், வீராங்கனைகள் எதிர்பார்ப்பு
/
ரூ.5 கோடியில் உள்விளையாட்டு அரங்கு அமைவதால் உத்வேகம்! விரைந்து முடிக்க வீரர், வீராங்கனைகள் எதிர்பார்ப்பு
ரூ.5 கோடியில் உள்விளையாட்டு அரங்கு அமைவதால் உத்வேகம்! விரைந்து முடிக்க வீரர், வீராங்கனைகள் எதிர்பார்ப்பு
ரூ.5 கோடியில் உள்விளையாட்டு அரங்கு அமைவதால் உத்வேகம்! விரைந்து முடிக்க வீரர், வீராங்கனைகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 17, 2025 10:43 PM

கோவை: நேரு ஸ்டேடியம் எதிரே ரூ.5 கோடியில் வாலிபால், கபடி உள்ளிட்டவற்றுக்கென உள்விளையாட்டு அரங்கு அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது வீரர், வீராங்கனைகளிடம் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது(எஸ்.டி.ஏ.டி.,) வீரர்களிடம் மறைந்துள்ள திறமையை வெளிப்படுத்த தேவையான பயிற்சி, நிதியுதவி அளிப்பதுடன், கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திவருகிறது. சென்னைக்கு அடுத்து தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் கோவை வளர்ந்த நகராக உள்ளது.
இவற்றுடன், விளையாட்டிலும் 'சளைத்தவர்கள் அல்ல' என்பதையும் கொங்கு மண்டல மக்கள் நிரூபித்து வருகின்றனர். கோவையை பொறுத்தவரை இங்கேயே பிறந்தவர்கள்தான் வீரர், வீராங்கனைகளாக அதிகம் உருவெடுத்து வருகின்றனர்.
கடந்தாண்டு முதல்வர் கோப்பை போட்டியில் கல்லுாரி மாணவர்கள், 16 ஆயிரத்து, 809 பேரும், பள்ளி மாணவர்கள், 18 ஆயிரத்து, 679 பேரும் பங்கேற்றனர். தவிர, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும் அதே வேளையில், அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போட்டி கனவை எட்டா கனியாக்கி விடுகிறது. தடகளம், கூடைப்பந்து, ஸ்கேட்டிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல், கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
கபடி, வாலிபால், பேட்மின்டன் போன்ற முக்கிய விளையாட்டுகளுக்கு, மாநகராட்சி மைதானத்தில் மழை, வெயிலில் வீரர்கள் பயிற்சி எடுக்கின்றனர். இப்போட்டிகளுக்கு உள் விளையாட்டு அரங்கு(இன்டோர்) அமையவுள்ளது வீரர்களிடம் உத்வேகத்தையும், அதேசமயம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சி.எஸ்.ஆர்., நிதியில்!
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,''நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் வாலிபால், கபடி போட்டிகளுக்கு வீரர்கள் பயிற்சி எடுக்க ஏதுவாக 'இன்டோர் ஸ்டேடியம்' அமையவுள்ளது.
''சி.எஸ்.ஆர்., நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கென, ரூ.5 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ரூ.1.6 கோடி வழங்கினார்கள் என்றால் 'நமக்கு நாமே' திட்டத்தில் இக்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.