/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2 நாட்களுக்குள் படிவங்கள் வினியோகிக்க ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
/
2 நாட்களுக்குள் படிவங்கள் வினியோகிக்க ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
2 நாட்களுக்குள் படிவங்கள் வினியோகிக்க ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
2 நாட்களுக்குள் படிவங்கள் வினியோகிக்க ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 09, 2025 12:41 AM
கோவை: கோவை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு இரு நாட்களுக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
படிவம் வினியோகித்து, பூர்த்தி செய்து திரும்ப பெறும் பணியை கண்காணிக்க, 10 ஓட்டுச்சாவடிகளுக்கு ஒருவர் வீதம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆய்வுக்கு வந்திருந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஐந்து ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் வீதம் கண்காணிப்பாளர்கள் நியமிக்க அறிவுறுத்தினர்.
அதன்படி, கூடுதலாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் தேர்தல் பிரிவினர் விளக்கினர்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்குகிறார்களா, 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்வது, செயலியில் பதிவேற்றம் செய்வது, படிவத்தை திரும்பப் பெறும்போது பூர்த்தி செய்திருப்பது சரியாக இருக்கிறதா என, கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டது.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவங்கள் வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு உதவ கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறத்தில் 2005ல், கிராமப்புறத்தில் 2002ல் வெளியிட்ட பட்டியலில் உள்ள வாக்காளர்கள், தற்போதும் அதே முகவரியில் வசிக்கிறார்களா என 'மேப்பிங்' செய்யப்பட்டது.
இவ்வகையில், 45 சதவீத வாக்காளர்கள் அதே முகவரியில் வசிப்பது தெரியவந்தது. அது தற்போதைய கள ஆய்வில் உறுதிப்படுத்தப்படும்.
அவர்களது மகன், மகள் உள்ளிட்ட வம்சாவளியினரையும் ஒரே இடத்தில் வாக்காளராக இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இப்பணியை செய்தால், 60 சதவீதத்தினர் நிரந்தர வாக்காளர்களாக ஒரே முகவரியில் இருப்பர். ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பணிகள் நடந்து வருகின்றன' என்றனர்.

