/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை மறுசுழற்சி மையங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்! தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
/
குப்பை மறுசுழற்சி மையங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்! தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
குப்பை மறுசுழற்சி மையங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்! தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
குப்பை மறுசுழற்சி மையங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்! தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : நவ 26, 2024 05:57 AM
கோவை; கோவையில், மக்கும் குப்பையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் மற்றும் உபயோகமான பொருட்களை சேகரிக்கும் மையங்களில், போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையத்தில் எருக் கம்பெனி அருகே பழைய குப்பை கிடங்கு வளாகத்தில், குப்பையில் மறுஉபயோகத்துக்கு பயனளிக்கும் பொருட்கள் சேகரிக்கும் மையம் மற்றும் நுண்ணுயிர் உரக்கிடங்கு செயல்படுகிறது. சில நாட்களுக்கு முன், பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது; நேரம் செல்ல செல்ல, தீ பரவல் அதிகமாகி, பிளாஸ்டிக் கழிவுகள் உருகி, கரும்புகை வெளியேறியது. தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். வாகனங்கள் செல்ல வழியேற்படுத்தும் வகையில், சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது
சூரிய ஒளி மின் தகடுகளில் தீப்பிடிக்க ஆரம்பித்தால், சேதம் இன்னும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த அதிகாரிகள், கட்டடத்தை இடித்து, தீயை அணைக்க அறிவுறுத்தினர். வேறு வழியின்றி, கட்டடத்தின் சுவர்கள் இடிக்கப்பட்டு, தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது; ஏழு மணி நேர போராட்டத்துக்கு பின்பே, முழுமையாக அணைக்க முடிந்தது.
மின் விபத்து காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக கூறி, சுகாதாரப் பிரிவினர் சர்வ சாதாரணமாக கடந்து செல்கின்றனர். மின் கசிவால் மட்டுமே தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறேதும் காரணங்களுக்காக யாரேனும் திட்டமிட்டு தீ வைத்தார்களா, சதி வேலை நடந்திருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. தீயை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துக்காக, ரூ.1.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டு இருக்கிறது.
தீ விபத்து ஏற்பட்டாலே மின் விபத்தை காரணம் காட்டி, தீயணைப்பு துறையினரும், போலீசாரும் வழக்கை முடிக்கின்றனர். தீ விபத்துக்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்கிற சந்தேகப்பார்வையில் விசாரிப்பது அவசியம். இக்கிடங்கை சுற்றிலும் உள்ள 'சிசி டிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, யாரெல்லாம் அச்சமயத்தில் அப்பகுதியை கடந்து சென்றார்கள் என்பதை கண்டறிந்து, விசாரணை நடத்தி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதுபோன்ற தீ விபத்து மற்ற மையங்களிலும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு, மைய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். ஒவ்வொரு மையத்திலும் இருப்பு வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் விரைந்து அகற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, 35 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் மற்றும், மறுஉபயோகத்துக்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் எட்டு மையங்களின் நிர்வாகிகளுடனான ஆய்வு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது; துணை கமிஷனர் சிவக்குமார் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் மோகன், உதவி நகர் நல அலுவலர் பூபதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 'மையங்களில் தீ விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு அம்சங்கள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். தீயணைப்பு கருவிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அலாரம் அமைக்க வேண்டும். தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். இருப்பில் உள்ள பொருட்களை காலி செய்ய வேண்டும். மையங்களை முறையாக பராமரிக்க வேண்டும். தீயணைப்புத்துறையில் தடையின்மை சான்று பெற வேண்டும்; இல்லையெனில், மூடப்படும்' என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

