/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம்! விழிப்புணர்வு முகாமில் விஞ்ஞானிகள் அறிவுரை
/
தென்னையில் ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம்! விழிப்புணர்வு முகாமில் விஞ்ஞானிகள் அறிவுரை
தென்னையில் ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம்! விழிப்புணர்வு முகாமில் விஞ்ஞானிகள் அறிவுரை
தென்னையில் ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம்! விழிப்புணர்வு முகாமில் விஞ்ஞானிகள் அறிவுரை
ADDED : ஏப் 06, 2025 09:56 PM

'தென்னையில், வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த மேலாண்மையே தீர்வு கொடுக்கும்,' என, விழிப்புணர்வு முகாம்களில் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை பகுதிகளில், கோவை வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு மையம், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில்வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.
வடக்கு ஒன்றியத்தில் திப்பம்பட்டியில் நடந்த முகாமில், கோவை வேளாண் பல்கலை விஞ்ஞானிகள், மஞ்சள் அட்டை பயன்படுத்துதல், ஒட்டுண்ணிகள் செயல்பாடுகள், தண்ணீர் பீய்ச்சி அடித்தல் உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தெற்கு ஒன்றியத்தில், வீரல்பட்டி, புளியம்பட்டி, பொன்னாண்டகவுண்டன்புதுார், தொண்டாமுத்துார், தளவாய்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தோட்டக்கலைத்தறை உதவி இயக்குனர் வசுமதி, வேளாண்பல்கலை பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர். இதில், விவசாயிகள், வேளாண்மை பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆனைமலை ஒன்றியத்தில், திவான்சாபுதுார், பெரியபோது, ஒடையகுளம் பகுதியில், விழிப்புணர்வு முகாம் நடந்தது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வரவேற்றார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ''தென்னந்தோப்புகளில், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும், ஊடு பயிர்களை சாகுபடி செய்தால், வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் இரை விழுங்கிகள், ஒட்டுண்ணிகள் பெருக்கம் அதிகரிக்கும். இயற்கை முறையில் பூச்சிகளின் தாக்கம் வெகுவாக குறையும்,'' என்றார்.
பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் சாந்தி பேசுகையில், ''வெள்ளை ஈ கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முறைகளை பின்பற்ற வேண்டும். மஞ்சள் நிற அட்டை ஒட்டுதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்,'' என்றார்.
வேளாண்மை விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, இணை இயக்குனர் சித்தார்த்ஆகியோர் பேசினர்.
தென்னை வளர்ச்சி வாரிய தளி பண்ணை மேலாளர் ரகோத்தமன், தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி, விஞ்ஞானி அருள்பிரகாஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
செயல்விளக்கம்
உடுமலை அருகேயுள்ள செல்லப்பம்பாளையத்தில், வேளாண் பல்கலையில், 4ம் ஆண்டு வேளாண் மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்னையில் பூச்சி, நோய் தாக்குதல், நுண்ணுட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கும் வகையில், ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர்.
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஓலைகளின் அடிப்பாகத்தில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி மரத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.
மேலும், அவை வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான திரவம் கீழே உள்ள இலைகளின் மேல்பகுதியில் விழுந்து பரவி, கரும்பூசணம் வளர்வதால் ஓலைகள் கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. இதனால் ஒளிச்சேர்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு தென்னை மரத்தின் வளர்ச்சி குறைந்துவிடும்.
இதற்கு, ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளாக, பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்த்து, மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை பயன்படுத்த வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலைகளின் உட்பகுதியில் படுமாறு, விசைத் தெளிப்பானைக் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். என்கார்சியா ஒட்டுண்ணிகளை விடுதல், கிரைசோபா விழுங்கிகளை விடுதல், கரும்பூசணங்களின் மீது மைதாமாவு பசை கரைசல் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும், தென்னையில் நுண்ணுாட்ட சத்து உரங்கள் இடுதல், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கினர்.
- நிருபர் குழு -