sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலைக்கருகலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை! தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் அறிவுரை

/

இலைக்கருகலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை! தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் அறிவுரை

இலைக்கருகலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை! தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் அறிவுரை

இலைக்கருகலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த மேலாண்மை! தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் அறிவுரை


ADDED : ஏப் 16, 2025 09:43 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; 'தென்னையில் இலைக்கருகல் நோயினை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறையை கடைபிடிக்க வேண்டும்,' என, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி தெரிவித்தார்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னையில்,வெள்ளை ஈ, கேரளா வேர் வாடல் உள்ளிட்ட நோய்களை தொடர்ந்து, இலைக்கருகல் நோயினாலும் மரங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நோய் ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும், நோயின் தாக்குதல் கோடை காலங்களில் அதிகமாகவும், மழைக் காலங்களில் குறைவாகவும் காணப்படுகிறது. மேலும், இதன் தாக்குதல் நான்கு மாத நாற்று முதல், 60 - 70 வயது வரையுள்ள மரங்கள் வரை காணப்படும்.

நோய் முற்றிய நிலையில், 10 முதல், 25 சதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந்நோய், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், அதிகமாக உள்ளது; மற்ற மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.தகுந்த காலநிலை வரும் போது காற்றின் வாயிலாக ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்துக்கு பரவுகின்றது. இந்நோய், 'லேசியோடிப்லோடியா தியோபுரோமே' என்ற பூஞ்சாணத்தால் ஏற்படுகிறது.

பூஞ்சான வித்துக்கள் இலைகளில் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் காற்றின் வாயிலாக பரவுகிறது. இந்நோய், இலை, மட்டை மற்றும் காய்களை தாக்கும். இலையின் நுனிப்பகுதி கருகி, ஓரங்கள் சுருங்கி, கீழ் நோக்கி வளைந்து காணப்படும்.

கருகலானது மேல் நோக்கி பரவி இலையின் பெரும் பரப்பை ஆக்கிரமிப்பு செய்வதால் இலையானது கருகி மற்றும் காய்ந்தது போல காணப்படும்.பாதிக்கப்பட்ட மட்டைகளை வெட்டிப்பார்த்தால், உட்பகுதியானது பழுப்பு நிறமாக காணப்படும். காய்களின் நுனிப்பகுதியிலும் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். நாளடைவில், பூஞ்சான வளர்ச்சி காய்களின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

மேலும், பாதிக்கப்பட்ட காய்கள் சுருங்கி உருக்குலைந்து காணப்படும். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது பூஞ்சானம் பருப்புக்குள் பரவி முளை சூழ்தசையையும் (எண்டோஸ்பெர்ம்) அழுகச் செய்யும். இதை கட்டுப்படுத்த ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி கூறியதாவது:

நோய் முற்றிய அடிமட்டை இலைகளை வெட்டி எரித்து விடுவதால், நோய் பரவுவதை தடுக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களுடன், ஆண்டுக்கு, 1.5 கிலோ பொட்டாஷ் (ஆண்டுக்கு, ஒரு மரத்துக்கு 3.5 கிலோ) இட வேண்டும்.

தழைச்சத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் இடக்கூடாது. வெயில் காலங்களில் ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.3 சதம் (3 கிராம்) கரைசலை ஓலைகள் நன்கு நனையும்படி ஒட்டுத்திரவம், ஒரு மில்லி, ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, 30 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

ெஹக்சகோனோசோல் இரண்டு மில்லி மருந்தை, 100 மில்லி தண்ணீரில் கலந்து மூன்று மாதங்கள் இடைவெளியில் வேர் வாயிலாக செலுத்த வேண்டும். ஆண்டுக்கு மரம் ஒன்றுக்கு ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கை மண்ணில் இட வேண்டும்.

பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி என்ற எதிர் உயிரி பாக்டீரியத்தை, 200 கிராம் என்ற அளவில், 5 - 10 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நோய் தாக்கிய மரங்களை சுற்றி மண்ணில் இட வேண்டும்.

மருந்து தெளிக்க முடியாத மரங்களில், ெஹக்சகோனோசோல், 2 மில்லி மருந்தை, 100 மில்லி தண்ணீரில் கலந்து மூன்று மாத இடைவெளியில் வேர் வாயிலாக செலுத்த வேண்டும்.

இந்த நோயானது இளம் மரங்களை காட்டிலும், வயது முதிர்ந்த மரங்களில் அதிகமாக காணப்படும். நோய் தாக்கப்பட்டுள்ள மரங்களுக்கு பரிந்துரை செய்யப்படும் ரசாயன உர அளவான ஆண்டொன்றுக்கு, இரண்டு கிலோ பொட்டாஷ் உரத்துடன் கூடுதலாக, ஒன்றரை கிலோ இடுவதால் மரத்துக்கு நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து (1.3 கிலோவுக்கு மேல்) இடக்கூடாது. மேலும், விபரங்களுக்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us