/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானாவாரி மக்காச்சோளம் சாகுபடிக்கு ஆர்வம்
/
மானாவாரி மக்காச்சோளம் சாகுபடிக்கு ஆர்வம்
ADDED : அக் 14, 2025 12:25 AM
குடிமங்கலம்:குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழையை ஆதாரமாகக்கொண்ட, மானாவாரி சாகுபடியிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
முன்பு இந்த சீசனில், கொண்டைக்கடலை, கொத்தமல்லி உள்ளிட்ட சாகுபடிகளையே விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். தற்போது மக்காச்சோளத்துக்கு நிலையான விலை கிடைப்பதால், மானாவாரியாகவும் இச்சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை பொழிவு நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில், மக்காச்சோளம் நடவு செய்து வருகிறோம். வேளாண்துறை சார்பில், கோவை வேளாண் பல்கலை., யின் மக்காச்சோள விதைகளை மானிய விலையில் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். சாகுபடியில் பிரதான பிரச்னையாக உள்ள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தவும், போதிய வழிகாட்டுதல்களை வேளாண்துறையினர் வழங்குவதில்லை.
இத்தகைய உதவிகள் வழங்கினால், பி.ஏ.பி., மண்டல பாசனம் மட்டுமல்லாது இதர சீசன்களிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்ய முடியும். தற்போது பெயரளவிற்கே, மானிய திட்டத்தை வேளாண்துறையினர் செயல்படுத்தி வருகின்றனர். குடிமங்கலம் வட்டாரத்தில் பிரதானமாக உள்ள மக்காச்சோள சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், வட்டார வேளாண்துறையினர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.