/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் குறுக்கீடு; தலைமை செயலரிடம் முறையீடு
/
மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் குறுக்கீடு; தலைமை செயலரிடம் முறையீடு
மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் குறுக்கீடு; தலைமை செயலரிடம் முறையீடு
மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் குறுக்கீடு; தலைமை செயலரிடம் முறையீடு
ADDED : செப் 05, 2025 10:41 PM
கோவை; 'மாநில ஜி.எஸ்.டி, அதிகாரிகளின் தொடர் குறுக்கீடுகளால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன' என, 'கொடிசியா' உள்ளிட்ட கோவை தொழில் அமைப்புகள் சார்பில், தலைமைச் செயலர் முருகானந்தத்தை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
மாநில ஜி.எஸ்.டி., துறையின் பறக்கும் படை சோதனைகள், ஆய்வுகள், ஐ.ஐ.டி., அறிவிப்புகள் மற்றும் ஜி.எஸ்.டி., தணிக்கைகளால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அறியாமல் செய்யும் சிறு பிழைகளுக்குக் கூட, பறக்கும்படை குழுவினரால் 299 சதவீதம் வரை அபராத தொகை விதிக்கப்படுகிறது.
மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் நேரடியாக ஆவணங்களைப் பதிவு செய்யும்போது ஒப்புகை வழங்குவதுபோல், மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் வழங்குவதில்லை. இதனால், தொழில் செய்வோரிடம் எந்த ஆதாரமும் இருப்பதில்லை. இதில், வெளிப்படைத் தன்மை வேண்டும்.
ஜாப்ஒர்க் நிறுவனங்கள், டெலிவரி சலானில் வரிவிகிதத்தை தவறுதலாக குறிப்பிட்டு விடுகின்றனர். இது வரி விதிப்புக்குள் வராது. ஆனால், இதற்கும் சேர்த்து 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பல கட்டத் தணிக்கை, ஆய்வு செய்வது, இரட்டை நடைமுறை என்பதோடு, அச்சுறுத்தலாகவும் உள்ளது. ஜி.எஸ்.டி., சட்டப்பிரிவு 74ன் கீழ் நோட்டீஸ் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்
விற்பனையாளர் வரி செலுத்தாதபோது, தொழில்நிறுவனங்கள் வரியைத் திரும்ப பெற முடிவதில்லை. இதில் திருத்தங்கள் செய்ய வேண்டும். கோரிக்கைகள், விண்ணப்பங்கள் மீது, சட்டப்பூர்வ காலக்கெடு கொண்டு வர வேண்டும். முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லாத நிலையிலும், பல சோதனைகள் நடத்தப்படுகின்றன. இது, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு இடையூறாக உள்ளது. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சோதனை நடத்த வேண்டும். இதுகுறித்து, மாநில ஜி.எஸ்.டி., துறைக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.