/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச ஓசோன் தினம்; பள்ளிகளில் விழிப்புணர்வு
/
சர்வதேச ஓசோன் தினம்; பள்ளிகளில் விழிப்புணர்வு
ADDED : செப் 16, 2025 09:52 PM

- நிருபர் குழு -
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச ஓசோன் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார்.
உதவி தலைமையாசிரியர் பூவிழி, பள்ளியின் அறிவியல் ஆசிரியர்கள் சுதா, சபரி, கிருபானந்தினி ஆகியோர் கூறியதாவது:
பூமிக்கு மேலே காற்று மண்டலத்தில் படிந்திருக்கும் ஓசோன், உயிரினங்களுக்கு நன்மை அளிக்கிறது. சூரியனிலிருந்து வரும் தீமை செய்யும் புறஊதா கதிர்களை தடுத்து, பூமியில் உள்ள உயிரினங்கள் உயிர் வாழ துணை புரிகிறது.
ஓசோன் படலம் பாதிக்கப்பட்டால், புறஊதாக் கதிர்கள் பூமியை நேரடியாக வந்து தாக்கும். இதனால் மனிதர்களுக்கு தோல் நோய்கள் ஏற்படும். தாவரங்களும், விலங்குகளும் பாதிக்கப்படும். விவசாயம் பாதிக்கும்; புவி வெப்பமாதல் அதிகமாகும்.
நீண்ட துார பயணத்துக்கு கார்களை பயன்படுத்துவதை தவிர்த்து, ரயிலை பயன்படுத்தலாம். இதனால் பெரிய அளவிலான கார்பன்- டை- ஆக்சைடு காற்றில் கலப்பதை தடுத்து சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யலாம்.
குறைந்த துாரங்களுக்கு நடந்து செல்லலாம் அல்லது சைக்கிளை பயன்படுத்தலாம். இது உடலுக்கும் இயற்கைக்கும் நல்லதாகும். ஓசோன் படலம் பாதுகாப்புக்கு அதிக அளவில் மரங்களை நடவு செய்து வளர்க்க வேண்டும்.
தேவையற்ற பொருளை எரிப்பதை காட்டிலும், பயன்படாத பொருட்களை மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
ஓசோன் தினத்தை முன்னிட்டு, 700 மாணவர்களுக்கு வீடுகளில் நடவு செய்து வளர்க்க மகிழம், புங்கன், கொய்யா, மாதுளை, சீத்தா ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும், பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு ஓசோன் தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
ரெட்டியாரூர், அர்த்தநாரிபாளையம் கிராமங்களில் விழிப்புண்வு பிரசாரம் நடந்தது. அதில் மாணவர்கள் விழிப்புணர்வுகோஷங்களை எழுப்பியும்,பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
* பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். தமிழாசிரியர் பாலமுருகன், ஓசோன் தினம் குறித்து பேசினார். மாணவர்கள், ஓசோன் என்ற எழுத்து வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு செய்தனர்.
* தேசிய பசுமைப்படை சார்பில், கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், உறுதி மொழி எடுத்தல், மரக்கன்றுகள் நடுதல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ரொட்டிக்கடை, அட்டக்கட்டி, செம்பாகவுண்டனர் காலனி நடுநிலைப்பள்ளி, ஏரிப்பட்டி, நெகமம், தேவணாம்பாளையம், வி.ஆர்.டி. உள்ளிட்ட பள்ளிகளில், ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடுமலை உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளிச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சேஷநாராயணன் வரவேற்றார்.
தலைமையாசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். 'இயற்கையை காப்போம், இயற்கையை போற்றுவோம்' என்ற தலைப்பில் ஆசிரியர்கள் பேசினர்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் மாலதி, இயற்கையை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் உறுதியேற்றனர். பள்ளி வளாகத்தில், மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி இடைநிலை உதவி தலைமையாசிரியர் பார்வதி நன்றி தெரிவித்தார்.