/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் குடியிருப்பு கட்டும் பகுதியில் போதையேறிப்போச்சு!ஊசிகளும், மருத்துவ கழிவும் குவிப்பு
/
போலீஸ் குடியிருப்பு கட்டும் பகுதியில் போதையேறிப்போச்சு!ஊசிகளும், மருத்துவ கழிவும் குவிப்பு
போலீஸ் குடியிருப்பு கட்டும் பகுதியில் போதையேறிப்போச்சு!ஊசிகளும், மருத்துவ கழிவும் குவிப்பு
போலீஸ் குடியிருப்பு கட்டும் பகுதியில் போதையேறிப்போச்சு!ஊசிகளும், மருத்துவ கழிவும் குவிப்பு
ADDED : ஜன 08, 2024 11:18 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு பகுதி புதர் மண்டி கிடப்பதுடன், ஊசி, மருந்துகள் கிடப்பதால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், குடியிருப்பு மக்கள் அச்சத்துடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், இரண்டு ஏக்கர் பரப்பில் போலீஸ் குடியிருப்பு இருந்தது. மூன்று அடுக்கு கொண்ட, 24 பிளாக்குகளில், 240 போலீசார் குடியிருப்புகள், 12 எஸ்.ஐ.,க்கள், மூன்று இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள் இருந்தன.
கட்டடம் பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்ததால் குடியிருப்பை காலி செய்ய உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக, டெண்டர் விடப்பட்டு கட்டடம் இடிக்கப்பட்டது.
புதியதாக, 266 வீடுகள் கட்ட, 75 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டது. நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டசபையில் முதல்வர் அறிவித்த நிலையில், காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.
அப்போது, போலீஸ் குடியிருப்புகள், 100 சதுர அடி வரை அதிகரிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதவாது, 650 - 750 சதுரஅடியாக மாற்றப்படும். இதன் அடிப்படையில், புதிய குடியிருப்புகளுக்கான வரைபடம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் பணிகள் மேற்கொள்ளப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
புதர் சூழ்ந்தது
போலீஸ் குடியிருப்பு கட்டடம் தற்போது, புதர் மண்டி விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. இங்கு இருந்து, விஷ பூச்சிகள், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், இப்பகுதி, திறந்தவெளி, 'பார்' போன்று மாறிவிட்டது. மாலை முதலே இப்பகுதிக்குள் சென்று மது குடிக்கின்றனர். இதனால், பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன.
ஊசி, மருந்து குவிப்பு
போலீஸ் குடியிருப்பு பகுதி தற்போது குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளது. புதர் அதிகளவு வளர்ந்து கிடப்பதால், நகருக்குள் மறைவான இடமாக மாறியுள்ளது. தற்போது பல விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறுகின்றன.
குப்பையோடு குப்பையாக பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்து பாட்டில்கள் அதிகளவு கிடக்கின்றன. மேலும், ரத்த பரிசோதனை செய்த கழிவுகளும் கிடக்கின்றன. இந்த ஊசிகள் மருத்துவமனையில் பயன்படுத்தியவையா அல்லது, போதைக்கு பயன்படுத்திய ஊசியா என தெரியவில்லை.
சுத்தம் செய்யணும்!
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்டுமானப்பணி துவங்கப்படாமல் உள்ளதால் தற்போது அந்த இடம் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், சமூக விரோத செயல்களுக்கு கூடாரமாக மாறியுள்ளது.
இங்கு, கஞ்சா புகைக்கின்றனர், மது அருந்துகின்றனர். இதனால், இந்த வழியாக செல்லும் மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் பின் பக்கமுள்ள இந்த இடத்தில் நடக்கும் அத்துமீறல்கள் தடுக்கப்படவில்லை.
தற்போது, ஊசி, மருந்துகளும் கிடப்பது, போதை ஊசி கலாசாரமும் இங்கு அரங்கேறுகிறது. அது, மருத்துவமனை கழிவா, போதை ஊசி செலுத்தும் ஆசாமிகள் குவித்துள்ளதா என்பதை அதிகாரிகள் தான் ஆய்வு செய்ய வேண்டும். ரத்த பரிசோதனை செய்யப்பட்டவை கழிவுகளும் வீசப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளும் அதிகளவு கிடக்கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்து, அந்த இடத்தில் உள்ள புதரை அகற்றி, சுத்தம் செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.