கிராமங்களில் வசதிகளை மேம்படுத்த அறிமுகம்! ‘வெற்றி’ திட்டத்தில் விபரங்கள் சேகரிப்பு
கிராமங்களில் வசதிகளை மேம்படுத்த அறிமுகம்! ‘வெற்றி’ திட்டத்தில் விபரங்கள் சேகரிப்பு
ADDED : அக் 18, 2026 05:39 PM

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, டி.என். வெற்றி திட்டம் வாயிலாக பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் - 34 ஊராட்சிகள், பொள்ளாச்சி வடக்கு - 39, பொள்ளாச்சி தெற்கு - 26, ஆனைமலையில் - 20 என, 119 ஊராட்சிகள், 250கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இதில், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு விதமான அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்னைகள் இன்றளவும் உள்ளது. இதை சரி செய்ய பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்தாலும், ஒரு சில தேவைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு வேண்டிய ரோடு, தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகள், ஒரு சில கிராமங்களில் இன்றும் முழுமையாக சென்றயவில்லை.
இதை சரி செய்ய தற்போது உள்ள அரசு, டி.என். வெற்றி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டம் வாயிலாக ஒவ்வொரு கிராமத்திற்கும், ஊராட்சி செயலர், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், சுய உதவிக்குழுவினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட, 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் சார்பில், ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச்சென்று மக்களின் தேவைகள் குறித்த தகவல்களை சேகரித்து, கிராமப்புற மாதிரி வரைபடம் தயார் செய்து, மக்களின் தேவையை அதில் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
சிறப்புக்கூட்டம்
கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் கூறியதாவது : டி.என். வெற்றி திட்டம் குறித்து கடந்த வாரம் கிணத்துக்கடவில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், ஒன்பது பேர் கொண்ட குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் கழிவுநீர் கால்வாய், குடிநீர், தெரு விளக்குகள், ரேஷன் கடை, துணை சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து முறையாக உள்ளதா அல்லது கூடுதல் தேவைகள் வேண்டுமா என்பது குறித்து தெரிந்து கொள்ளுதல் மற்றும் புது தேவைகள் குறித்து மக்களுடன் ஆலோசித்து அதற்கு ஏற்றவாறு வரைபடம் தயார் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இப்பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
