பார்வைக்கு தெரியாத அறிவிப்பு பலகை: வாகன ஓட்டுநர்கள் குழப்பம்
பார்வைக்கு தெரியாத அறிவிப்பு பலகை: வாகன ஓட்டுநர்கள் குழப்பம்
UPDATED : ஜூலை 08, 2026 05:38 PM
ADDED : ஜூலை 08, 2026 05:11 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், அறிவிப்பு பலகைகளை பார்வைக்கு தெரியும் படி வைக்காமல், மாற்று இடத்தில் வைத்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி - கோவை ரோடு கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது, பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு செல்லும் வாகனங்கள், பொள்ளாச்சி நகருக்குள் வராமல் செல்வதற்கேற்ப இந்த சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, இச்சாலை கோவை சாலையுடன் இணைக்கும் வகையில், ஆச்சிப்பட்டி அருகே பாலம் கட்டப்பட்டது. சர்வீஸ் ரோடுகளும் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கோவையில் இருந்து வரும் வாகனங்கள், பொள்ளாச்சிக்கு செல்ல வழி தெரியாமல் பாலம் சென்று மீண்டும் திரும்பி செல்லும் நிலை உள்ளது. அறிவிப்பு பலகை உரிய இடத்தில் வைக்காததால் வாகன ஓட்டுநர்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.
சர்வீஸ் ரோட்டில் இருந்து சிறிது துாரம் தள்ளி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வருவோருக்கு சிரமம் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, சர்வீஸ் ரோடு துவங்குவதற்கு ஒரு கி.மீ., முன்பே பெரிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதன்பின், சர்வீஸ் ரோடு துவங்கும் இடத்தில் ஒரு அறிவிப்பு பலகை அமைத்தால் பயனாக இருக்கும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெயரில் பிழை பொள்ளாச்சி - கோவை ரோட்டில், ஆச்சிபட்டியில் நான்குவழிச்சாலை பாலத்தின் அருகில் சர்வீஸ் ரோட்டில், குள்ளக்காபாளையம் என்பதற்கு பதிலாக, குளக்கல்பாளையம் என, தமிழ், ஆங்கிலத்தில் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். எனவே, எழுத்துப்பிழையுடன் உள்ள அறிவிப்பு பலகையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
