/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலங்களுக்கு பாசன வசதி; விவசாயிகள் பயன்பெற யோசனை
/
கோவில் நிலங்களுக்கு பாசன வசதி; விவசாயிகள் பயன்பெற யோசனை
கோவில் நிலங்களுக்கு பாசன வசதி; விவசாயிகள் பயன்பெற யோசனை
கோவில் நிலங்களுக்கு பாசன வசதி; விவசாயிகள் பயன்பெற யோசனை
ADDED : ஜன 24, 2025 10:01 PM

- - நமது நிருபர்-
''கோவில் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து தருவதன் மூலம், குறு- சிறு விவசாயிகள் பயன்பெறுவர்'' என்று கோவில் பூசாரிகள் நலச்சங்கம் யோசனை தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் வாசு அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழகம் முழுவதும், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு, 4 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் உள்ளன.
இவற்றில், பெரும்பாலான நிலங்கள், வானம் பார்த்த பூமியாக வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக, இது போன்ற நிலங்களை குத்தகைக்கு விட முடியாத நிலை உள்ளது.
வறண்ட இந்நிலங்களுக்கு, இலவச மின் இணைப்பு கொடுத்து, ஆழ்துளை கிணறுகள் வாயிலாக, நீர்ப்பாசன வசதி செய்து கொடுத்தால், குறு - சிறு விவசாயிகள், இது போன்ற நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிர் சாகுபடி செய்ய முன் வருவார்கள்.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் பலர் பயனடைவதுடன், குத்தகை மூலம், அறநிலையத் துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
பல ஆண்டு காலமாக, வறண்ட கோவில் நிலங்களை யாருக்கும் பயன்படாமல் வைத்திருப்பதை காட்டிலும், இந்நிலங்களில் பாசன வசதி செய்து, குறு சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுவதால், நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், வருவாயும் அதிகரிக்கும்.
இதுபோன்ற கோவில் நிலங்களை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது ஏலத்தில் குத்தகைக்கு விட அறநிலையத்துறை சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.