மின்னணு இயந்திரங்களில்.. எல்லாம் சரியா இருக்கா? . 1,000 மாதிரி ஓட்டுகள் பதிவு
மின்னணு இயந்திரங்களில்.. எல்லாம் சரியா இருக்கா? . 1,000 மாதிரி ஓட்டுகள் பதிவு
ADDED : ஏப் 18, 2026 04:26 AM

கோவை : கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை, 1,000 மாதிரி ஓட்டு பதிவு செய்து தயார்படுத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லுார், தொண்டாமுத்துார், மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிகம் என்பதால், 2 இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.
நேற்று இவற்றில் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய பேலட் ஷீட் பொருத்தப்பட்டது.
கோவை தெற்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் ஷீட் பொருத்தும் பணி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியில் நடந்தது. யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை அறிவதற்கான 'விவி பேட்' இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கிய சின்னங்கள் அடங்கிய 'சிப்' பொருத்தி சரிபார்க்கப்பட்டது.
வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்களை தயார்படுத்தும் பணி நேற்று நடந்தது.
5 சதவீத இயந்திரங்களில், தலா 1,000 ஓட்டுகள் பதிவு செய்து, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. அனைத்து பட்டன்களும் இயங்குகின்றனவா என சரிபார்க்கப்பட்டது.
1,000 ஓட்டுகளுக்கான சின்னங்கள் விவி பேட் இயந்திரத்தில் சரியாக இருக்கின்றனவா, சின்னங்கள் சரியாக அச்சாகி இருக்கிறதா, சின்னம் பதிவாகிறதா என சரிபார்க்கப்பட்டது.
அதன்பின், பதிவான ஓட்டுகள் அழிக்கப்பட்டு, எந்த பதிவும் இல்லாமல், ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப தயார்படுத்தப்பட்டது. அவ்வியந்திரங்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டன.
