/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோல் சார்ந்த நோயா... 'ஓப்பனா' காட்டுங்க!
/
தோல் சார்ந்த நோயா... 'ஓப்பனா' காட்டுங்க!
ADDED : ஜூலை 28, 2025 09:29 PM
கோவை; கோவை மாவட்டம் முழுவதும் தொழுநோய் கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டங்களாக துவங்கவுள்ள நிலையில், களப்பணியாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என, கோவை  மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி அறிவுறுத்தியுள்ளார்.
தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ்,  மாநில அளவில் கணக்கெடுப்பு பணி ஆக.,1ம் தேதி முதல் 20ம் தேதி வரை முதல்கட்டமாக நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக முகாம்கள், அக்., 24ம் தேதி முதல் நவ., 10ம்  தேதி வரை நடக்கும்.
கோவை மருத்துவபணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறியதாவது:
கோவையில், 18.37 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதற்காக, 865 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. களப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளோம்.
வீடு வீடாக ஆக., 1ம் தேதி முதல் தொழுநோய் கணக்கெடுப்பு பணிக்காக வருபவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
தோல் சார்ந்த பிரச்னைகள் இருப்பின் தயக்கமின்றி காண்பிக்க வேண்டும். தொழுநோயை ஆரம்பநிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

