/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரிசியிலும் வந்தாச்சு கலப்படம்?
/
அரிசியிலும் வந்தாச்சு கலப்படம்?
ADDED : அக் 27, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி ளைச்சலை பெருக்கவும், உற்பத்தி செலவை குறைக்கவும், புதுப்புது நெல் ரகங்களை அரசு வெளியிடுகிறது. ஆனால், அவை அரிசியாகி கடைகளுக்கு வருவதாக தெரியவில்லை. ஏன் என்று துருவியபோது, குறைந்த விலையுள்ள அந்த அரிசி ரகங்களை, பிரபலமான உயர் ரக அரிசி என கூறி, இரு மடங்கு வரை அதிக விலைக்கு விற்பதாக தெரியவந்துள்ளது. பல ரக நெல்லும் ஒன்றாக கலந்து அரைத்து அனுப்புவதும் நடக்கிறது.
ஒரே மாதிரி இருப்பதால், அரிசியில் கலப்படம் செய்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. விலை உயர்ந்த அரிசியை வாங்கினாலும், சில சமயங்களில் ஏமாந்து விடுகிறோம். சமைத்து சாப்பிட்ட பிறகுதான் மணமும், சுவையும் காட்டி கொடுக்கிறது. கலப்படத்தை அரசுதான் தடுக்க வேண்டும். -வளர்மதி, காளப்பட்டி
அரிசி வாங்கும் போது கையில் எடுத்து பார்ப்போம். ஆனால் கலப்படம் இருந்தால் தெரியாது. காலையில் சமைத்த சாதம், மாலைக்குள் நீர் விட்டது போல் மாறி இருந்தால், அந்த அரிசி தரமற்றது என புரியும். வியாபாரியிடம் சொன்னால், மாற்றி தந்து விடுவார்கள். மறுத்தால், கடையை மாற்ற வேண்டியது தான். -கல்பனா, விளாங்குறிச்சி
வருமானத்துக்கு தகுந்த மாதிரி குறைந்த விலை அரிசி தான் வாங்குகிறோம். அதையே அதிக விலைக்கு விற்பது நம்பிக்கை துரோகம். ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலை தடுக்க அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். --சத்யா, மரப்பாலம்
வழக்கமாக பொன்னி அரிசிதான் வாங்குகிறோம். 25 கிலோ சிப்பமாக வாங்குவதால், கலப்படம் இருக்காது. குறைபாடு இருந்தால் கடைக்காரர் மாற்றி வேறு அரிசி கொடுத்து விடுவார். கேள்வி எதுவும் கேட்பது இல்லை. அதனால் எங்களுக்கு பிரச்னை இல்லை. -ஜோதீஸ்வரி, சிவானந்தா காலனி
ஐ.ஆர்.20 அரிசிதான் வாங்குவேன். உருண்டையாக, பெரிதாக இருக்கும். சாப்பாடுக்கும், இட்லிக்கும் ஒரே அரிசிதான் பயன்படுத்துகிறோம். அந்த அரிசியுடன் வேறு அரிசியை கலக்க முடியாது. கலந்தால் தனியாக தெரியும். சரி இல்லை என்றால் திரும்ப கொடுத்து, வேறு வாங்கி கொள்வோம். - - -பச்சையப்பன், கோபாலபுரம்
தரம் குறைந்த அரிசியை, பாலிஷ் செய்து பொன்னி அரிசி என்று அதிக விலைக்கு விற்கின்றனர். ரேஷன் அரிசியை மெருகேற்றி கடைகளில் விற்று லாபம் அடைகின்றனர். அதிகாரிகள் நினைத்தால் நிச்சயமாக தடுக்க முடியும். செய்ய வேண்டுமே? - தீபக்குமார், சுங்கம் நேருநகர்
அரிசிதான் நம்முடைய வாழ்க்கைக்கே ஆதாரம். அதில் கலப்படம் செய்தால் பெரும் கொடுமை. எல்லா வியாபாரிகளும் தவறு செய்ய மாட்டார்கள். உணவு பொருள்களில் கலப்படம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். -லோகேஸ்வரி, சிங்காநல்லுார்
ஒரே நிறுவனம் பல பிராண்டுகளில் அதே அரிசியை, பேக்கிங் மாற்றி வெவ்வேறு விலையில் விற்கிறது. தொடர்ந்து வாங்கி பயன்படுத்தும் போதுதான் தெரிகிறது. கடைக்காரர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும். லாபம் தானே என்று அமைதியாக இருக்கின்றனர். -விவேக், செல்வபுரம்

