/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டினுள் சாப்பிட எதாவது இருக்கா... தும்பிக்கையை விட்டு தேடிய யானை
/
வீட்டினுள் சாப்பிட எதாவது இருக்கா... தும்பிக்கையை விட்டு தேடிய யானை
வீட்டினுள் சாப்பிட எதாவது இருக்கா... தும்பிக்கையை விட்டு தேடிய யானை
வீட்டினுள் சாப்பிட எதாவது இருக்கா... தும்பிக்கையை விட்டு தேடிய யானை
ADDED : ஆக 21, 2025 08:29 PM

வால்பாறை; தும்பிக்கையை விட்டு, வீட்டினுள் உணவு தேடிய ஒற்றை யானையால், ரொட்டிக்கடை பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.குறிப்பாக, முத்துமுடி, இஞ்சிப்பாறை, சோலையாறு, செலாளிப்பாறை, புதுத்தோட்டம் உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், புதுத்தோட்டம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முகாமிட்டுள்ள ஒற்றை யானை, ரொட்டிக்கடை, பாரளை, அய்யர்பாடி, பாறைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வலம் வருகிறது.
இந்நிலையில், ரொட்டிக்கடை பகுதிக்கு நள்ளிரவில் சென்ற ஒற்றை யானை, அங்குள்ள வீடுகளில் பலாமரத்தில் இருந்த பழத்தை உட்கொண்டது. அதன்பின், சத்துணவு பணியாளர் மேரி என்பவரது வீட்டின் ஜன்னலை சேதப்படுத்தி, தும்பிக்கையை விட்டு உணவு தேடியது. உணவு பொருட்கள் எதுவும் கிடைக்காத நிலையில், சிறிது நேரத்துக்கு பின் யானை நகர்ந்து சென்றது.
அப்போது, வீட்டினுள் இருந்தவர்கள், முன்பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருந்தனர். யானை உணவு தேடியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது: புதுத்தோட்டம் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, இரவு, 10:00 மணிக்கு பின், அய்யர்பாடி ரோடு வழியாக ரொட்டிக்கடை பஜார் பகுதிக்கு வருகிறது. இரவு முழுவதும் குடியிருப்பு பகுதியில் வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொள்கிறது.
யானை யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால், யானையை காணும் போது மக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. வெளியில் நடந்து செல்ல பயமாக உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஒற்றை யானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

