UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 11:00 PM

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்கள் அளித்த ஆயிரக்கணக்கான மனுக்கள், தீர்வு காணப்படாமல் மூட்டை மூட்டையாகக் கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, 2025-ம் ஆண்டில், திருப்பூர் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில், 325 முகாம்கள் நடத்தப்பட்டு, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சி மாறிய நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஐந்தாவது தளத்தில் செயல்படும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் அருகே, மனுக்கள் மூட்டைகளாகக் கட்டப்பட்டு வெளியே போடப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து, நேற்று அந்த மூட்டைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் மறைத்து வைப்பதால் மட்டும் மக்களின் பிரச்னைகள் தீர்ந்து விடாது. அவற்றின் மீது துறைவாரியாக விசாரணை நடத்தி, உரிய தீர்வு காண கலெக்டரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
