/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுப்பாளையம் தடுப்பணை துார் வாருவது அவசியம்
/
புதுப்பாளையம் தடுப்பணை துார் வாருவது அவசியம்
ADDED : ஜூன் 08, 2025 10:20 PM

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையம் தடுப்பணை பிளாஸ்டிக் குப்பை நிறைந்து காணப்படுகிறது.
கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீர், பல்வேறு தடுப்பணைகளை நிறைப்பதால், கோவை வடக்கு பகுதியில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் ஒரு தடுப்பு அணை உள்ளது. இங்கு எப்போதும் தடுப்பணை நீர் நிறைந்து காணப்படும். கடந்த சில ஆண்டுகளாக இத்தடுப்பணையில் இப்பகுதியில் உள்ள நேரு காலனி, வெற்றிலைகாளிபாளையம், ராக்கிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் தடுப்பணைகளை நிறைத்து வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, இப்பகுதியை வாழிடமாக கொண்ட சிறு பறவைகள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், ''இத்தடுப்பணை கடந்த பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுகள் நிறைந்து, தண்ணீர் மாசடைந்து கெட்டுப் போய் உள்ளது. தண்ணீர் ஓரளவு துாய்மையாக இருந்தபோது, பறவைகள் தங்களது வாழிடமாக தடுப்பணையை கொண்டிருந்தன. தற்போது, எந்த பறவைகளும் தடுப்பணைக்கு வருவதில்லை. பிளாஸ்டிக் கழிவுகளும், சாக்கடை நீரும் தடுப்பணையில் நிறைந்து கிடப்பதால், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தடுப்பணைக்கு வரும் கழிவு நீரை தடுத்து நிறுத்தி, துாய்மையான நீராக மாற்ற, அரசு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், எதிர்காலத்தில் இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய நீர் ஆதாரமான புதுப்பாளையம் தடுப்பணையை, முழுவதுமாக இழக்கும் சூழ்நிலை உருவாகலாம்'' என்றனர்.