/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு ஆற்று நீரை பாதுகாப்பது அவசியம்: விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
/
ஆழியாறு ஆற்று நீரை பாதுகாப்பது அவசியம்: விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
ஆழியாறு ஆற்று நீரை பாதுகாப்பது அவசியம்: விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
ஆழியாறு ஆற்று நீரை பாதுகாப்பது அவசியம்: விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 27, 2025 04:54 AM

பொள்ளாச்சி: குடிநீர் ஆதாரமாக உள்ள ஆழியாறு ஆற்றில், குப்பை உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க, ஆங்காங்கே விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு வைக்க வேண்டும்.
பொள்ளாச்சி அருகே உள்ள, ஆழியாறு ஆறு பல ஊர்கள் கடந்து, கேரள மாநிலம் பாரதப்புழா ஆற்றில் கலக்கிறது. ஆறு பயணிக்கும் வழித்தடத்தில், குடிநீர் ஆதார நீரேற்று நிலையங்கள் உள்ளன.
ஆற்றில் இருந்து, குடிநீருக்காக பல மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரித்து வினியோகிக்கப்படுகிறது.
ஆனால், குப்பை உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவது, கழிவுநீரை கலப்பது, ரசாயன மற்றும் சாயக்கழிவுகள் கலப்பதால், ஆற்று நீர் மாசடைகிறது.
சமீபகாலமாக, பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணியர், அத்துமீறி ஆற்றில் இறங்கி குளிக்கவும் முற்படுகின்றனர். ஆற்றின் கரையில் அமர்ந்து, உணவு உட்கொள்ளும் பலரும் எஞ்சிய பிளாஸ்டிக் மற்றும் உணவுக் கழிவுகளை, ஆற்றில் வீசி செல்கின்றனர். மேலும், நகராட்சி நீரேற்று நிலையம், அம்பராம்பாளையம் பகுதியில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வோர், பூஜை பொருட்கள், மயானத்தில் இருந்து எடுத்து வரும் அஸ்தி போன்றவற்றை ஆற்றில் விடுகின்றனர். இதனால், தண்ணீர் மாசடைகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சுற்றுலாப் பயணியர் வந்து செல்லும் பகுதிகளில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: ஆழியாறு ஆற்றில் அம்பராம்பாளையத்தில் வாகனங்களை கழுவ தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், அம்பராம்பாளையத்தில் ஆற்றுக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று, கழுவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதேபோல, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. குடிநீர் ஆதாரமாக விளங்கும் தண்ணீர் மாசடைந்தால், அதனை பருகும் மக்கள் பாதிப்படைவர். எனவே, ஆற்றுப் படுகைகளில் குப்பைக் கொட்டுவதை தடுக்கவும், வாகனங்களை கழுவுவதை தவிர்க்கவும் ஆங்காங்கே எச்சரிக்கை அறிவிப்பு வைக்க வேண்டும்.
தண்ணீர் மாசடைவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஆற்றின் பாதுகாப்பை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

