/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊழலை ஒழிக்க திறமையுடன் நேர்மையும் தேவை! முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேச்சு
/
ஊழலை ஒழிக்க திறமையுடன் நேர்மையும் தேவை! முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேச்சு
ஊழலை ஒழிக்க திறமையுடன் நேர்மையும் தேவை! முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேச்சு
ஊழலை ஒழிக்க திறமையுடன் நேர்மையும் தேவை! முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேச்சு
ADDED : மார் 11, 2024 01:55 AM

கோவை;''திறமையுடன் நேர்மையும் இருந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்,'' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், www.obcrights.org என்ற 'இளையோரின் பொக்கிஷம்' வலைதளம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சுகுணா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில், அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:
மாணவர் சமுதாயத்துக்காக இந்த வலைதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்து வளர்வதில் பெருமைப்பட வேண்டும். இங்கு இல்லாத வளமே கிடையாது. அதேசமயம், ஏன் இந்தியா இன்னும் வளரும் நாடாகவே உள்ளது என்பதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.
கடந்த, 2020ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றார் அப்துல் கலாம்; ஆனால், வளரவில்லை. ஒரு நாடு வளர்ந்த நாடாக மாற பொருளாதார குறியீட்டில் முன்னேற வேண்டும். கல்வி முறையில் நம் மாநிலம் எண்ணிக்கையில் நன்றாக உள்ளது; ஆனால், தரம் நன்றாக இல்லை. மாணவர்களிடம் தொடர்பு திறன் தமிழகத்தில் மிகவும் மோசமாக உள்ளது. ஆண்டுக்கு, 20 லட்சம் பொறியியல் மாணவர்கள் படித்து வெளியே வருகின்றனர்.
பொறியியல் பட்டதாரிகளாக வெளியே வருகின்றனரே தவிர பொறியாளர்களாக அல்ல. திறமையை வளர்க்கவே கல்லுாரி செல்கிறோம். ஆனால், வளர்த்தவில்லை. கடந்த, 20 ஆண்டுகளில் பள்ளி, கல்லுாரிகளில் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்த்த மறந்துவிட்டோம்.
திறமை மட்டும் போதாது; நேர்மையும் இருந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். மாணவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக, நேர்மையானவர்களாக கொண்டுவரும் நோக்கில் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு நாடு வளமான, வளர்ந்த நாடாக மாற எல்லோரும் சேர்ந்து பாடுபட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், முன்னாள் போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் சுந்தரராமன், கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி, சக்தி மசாலா குழும இயக்குனர் சாந்தி, அரோமா குழும நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

