/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் குளக்கரை சாலைக்கு வந்து விட்டது நல்ல வேளை!
/
பேரூர் குளக்கரை சாலைக்கு வந்து விட்டது நல்ல வேளை!
ADDED : பிப் 22, 2024 05:55 AM

கோவை: ஏராளமான மேடு பள்ளங்களுடன், வாகனங்களை வீழ்த்தி வந்த பேரூர் குளக்கரை ரோடு, நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, வேகமாக சீரமைக்கப்படுகிறது.
கோவை, உக்கடம் மற்றும் செல்வபுரம் பகுதிகளிலிருந்தும், பேரூரிலிருந்தும் கோவைப்புதுார் பகுதிக்குச் செல்வதற்கு, சுண்டக்காமுத்துார் வழியாக, முக்கிய வழித்தடம் உள்ளது.
தினமும் இந்த ரோட்டை, பல ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோடு, பேரூர் குளக்கரையை ஒட்டியும் செல்கிறது. பேரூர் பகுதியில் இருந்து வரும் ரோடு, ஓரளவுக்கு நன்றாகவுள்ளது.
ஆனால், புட்டுவிக்கி ரோடு - பேரூர் ரோடு சந்திப்பு பகுதியிலிருந்து, சுண்டக்காமுத்துார் செல்லும் ரோட்டில், குளக்கரையில் அமைந்துள்ள ரோடு, ஆபத்தான இடமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டில், பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக, இந்த ரோட்டில் குழாய் பதிக்கப்பட்ட பின், முறையாக கான்கிரீட் தளம் அமைத்து, குழியை மூடாமல் அதன் மீது ரோடு போட்டதால், பள்ளமும் மேடுமாக பயமுறுத்துகிறது. அரை கி.மீ., துாரத்துக்கும் குறைவான அந்த ரோட்டில், ஆயிரம் மேடு பள்ளமாக இருப்பதால், தினமும் ஏராளமான வாகனங்கள் குறிப்பாக, டூ வீலர்களில் வருவோர் விழுந்து எழுகின்றனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில், 'அரை கி.மீ., ரோடு; அதில் ஆயிரம் பள்ளம் மேடு' என்ற தலைப்பில், கடந்த 16ம் தேதியன்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அந்த ரோட்டைத் தோண்டி, 'வெட்மிக்ஸ்' போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அதே போல, குளக்கரையைத் தாண்டி, குனியமுத்துார் ரோடு வரையிலுமான ரோட்டை சீரமைப்பதுடன், சந்திப்பு பகுதியில் வேகத்தடையை ஒட்டியுள்ள பெரும் பள்ளத்தையும், சரி செய்ய வேண்டுமென்று, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
பேரூர் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டிலிருந்து, புட்டுவிக்கி ரோடு சந்திப்பு வரையிலுமான குளக்கரை ரோட்டிலும், ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே பள்ளங்கள் உள்ளன. அவற்றையும் இப்போதே சீரமைக்க வேண்டுமென்று, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.