/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மடத்துக்குளத்தில் தாலுகா மருத்துவமனை துவங்கி... பத்து வருஷமாச்சு! எவ்வித கட்டமைப்பும் இல்லாமல் தவிக்கும் மக்கள்
/
மடத்துக்குளத்தில் தாலுகா மருத்துவமனை துவங்கி... பத்து வருஷமாச்சு! எவ்வித கட்டமைப்பும் இல்லாமல் தவிக்கும் மக்கள்
மடத்துக்குளத்தில் தாலுகா மருத்துவமனை துவங்கி... பத்து வருஷமாச்சு! எவ்வித கட்டமைப்பும் இல்லாமல் தவிக்கும் மக்கள்
மடத்துக்குளத்தில் தாலுகா மருத்துவமனை துவங்கி... பத்து வருஷமாச்சு! எவ்வித கட்டமைப்பும் இல்லாமல் தவிக்கும் மக்கள்
ADDED : மே 23, 2025 06:59 AM

மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா அரசு மருத்துவமனை துவங்கி, 10 ஆண்டுகளாகியும், அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாததால், மருத்துவத்திற்கு மக்கள் அலைகழிக்கப்படும் நிலை உள்ளது.
மடத்துக்குளம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில், கடந்த, 1950ம் ஆண்டு, பஞ்சாயத்து யூனியன் மருந்தகம் தொடங்கப்பட்டது.
பின், 1956, ஜன.,14ம் தேதி மருந்தக புதிய கட்டட பணிகள் தொடங்கி, இரண்டு ஆண்டு கட்டுமான பணிக்கு பின், 1958ல் அன்றைய, உள்துறை அமைச்சர், பக்தவச்சலத்தால் புதிய கட்டடம் திறக்கப்பட்டு, பிரசவ விடுதியாகவும் செயல்பட்டது. தொடர்ந்து, 1992ல் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றம் செய்யப்பட்டது.
மடத்துக்குளம் தாலுகா, 2009ல் உருவாக்கப்பட்ட நிலையில், 4 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராம மக்கள் என, லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவம் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், என பல ஆண்டு கோரிக்கைக்கு பின், கடந்த, 2015ல் தாலுகா அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டது.
50 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டடமும் கட்டப்பட்டது. தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 10 ஆண்டுகளான நிலையிலும், மக்கள் தொகை, நோயாளிகள் வருகை அடிப்படையில், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களுக்கு கூட, நியமிக்கப்படாமல், அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாத, தாலுகா மருத்துவமனையாக உள்ளது.
இம்மருத்துவமனைக்கு, 7 டாக்டர்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 4 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ள நிலையில், அதிலும் ஒரு டாக்டர், அயற்பணியாக, உடுமலை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
நோயாளிகள் வருகைக்கு ஏற்ப, செவிலியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், 7 செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
மேலும், மருத்துவமனைக்கு உரிய ஆய்வகம், எக்ஸ்ரே என அடிப்படை மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படாமல், பெயர் அளவிற்கு மருத்துவமனையாக உள்ளது.
மடத்துக்குளம் தாலுகா மட்டுமன்றி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எல்லையோர கிராம மக்களும், அரசு மருத்துவமனைக்கு வரும் நிலையில், போதிய டாக்டர்கள் மற்றும் அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமும், 700க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். போதிய டாக்டர்கள் இல்லாததால், உரிய சிகிச்சை கிடைக்காமலும், பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
இங்கு, தற்போது, 60 படுக்கை வசதிகள் இருந்தும், உள் நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிப்பதில் சிக்கல் உள்ளதால், உடுமலை, கோவை மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அவசர சிகிச்சை பிரிவுக்கு உரிய டாக்டர்கள், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், பல கி.மீ., துாரம் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பொது மருத்துவத்திற்கு மட்டுமே, ஒரு சில டாக்டர்கள் உள்ள நிலையில், விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் வகையிலும், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர் என சிறப்பு டாக்டர்கள் இல்லை.
கர்ப்பிணிகள் ஏராளமானவர்கள் வரும் நிலையில், ஸ்கேன் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததால், தனியார் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலை உள்ளது.
அரசு கவனிக்கணும்
பொதுமக்கள் கூறியதாவது :
ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த போது கூட, பகலில் டாக்டர்கள், நர்ஸ்கள் இருந்தனர். அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்ட நிலையில், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அடிப்படையான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கும் நிலையே உள்ளது.
குறைந்தளவு டாக்டர்களே உள்ள நிலையில், ஷிப்ட் அடிப்படையில் பெரும்பாலான நேரம் டாக்டர்கள் இருப்பதில்லை. அதிலும், இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால், அவசர மருத்துவ சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
எனவே, மடத்துக்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் முழுமையான மருத்துவ கட்டமைப்புகள், உபகரணங்கள், தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்கவும், 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.