/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலங்களை முடக்கி மூன்று ஆண்டுகள் ஆனது முடக்கமும் நீங்கவில்லை: சாலை பணியும் துவங்கவில்லை
/
நிலங்களை முடக்கி மூன்று ஆண்டுகள் ஆனது முடக்கமும் நீங்கவில்லை: சாலை பணியும் துவங்கவில்லை
நிலங்களை முடக்கி மூன்று ஆண்டுகள் ஆனது முடக்கமும் நீங்கவில்லை: சாலை பணியும் துவங்கவில்லை
நிலங்களை முடக்கி மூன்று ஆண்டுகள் ஆனது முடக்கமும் நீங்கவில்லை: சாலை பணியும் துவங்கவில்லை
ADDED : அக் 27, 2025 10:38 PM
அன்னூர்: ஆயிரம் ஏக்கர் நிலங்களை முடக்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை பணியும் துவங்கவில்லை. முடக்கமும் நீக்கப்படவில்லை, என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அன்னூர், புளியம்பட்டி, பண்ணாரி வழியாக கர்நாடகா வரை பல ஆயிரம் வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
எனினும் இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளது. காலை மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு தீர்வாக சரவணம்பட்டி அடுத்த குரும்ப பாளையத்தில் துவங்கி ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 2022ல் 3 ஏ நோட்டீஸ் தரப்பட்டது. கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து புதிய புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்ட பகுதியில் உள்ள நிலங்கள் வாங்கவோ விற்கவோ அடமானம் செய்யவோ முடியாதபடி முடக்கி வைக்கப்பட்டன.
முடக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து கதவுகரை பகுதி விவசாயிகள் கூறியதாவது:
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம். அல்லது மேம்பாலம் அமைக்கலாம்.
அதற்கு பதில் ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவது தேவையற்றது. எங்களது நிலங்களை முடக்கி வைத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. முடக்கமும் நீக்கப்படவில்லை. சாலை பணியும் துவங்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. 95 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினோம். அதன் பிறகு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எங்களுக்கு சொந்தமான நிலத்தை நாங்கள் அடமானம் செய்ய முடியவில்லை. கடன் பெற முடியவில்லை.
வீட்டில் சுப காரியங்களுக்காக எங்கள் குழந்தைகளின் கல்விக்காக விற்பனை செய்ய முடியவில்லை. மத்திய, மாநில அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

