/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஸ்கோர்ஸில் பள்ளி அருகே காத்திருக்கு அபாயம்!
/
ரேஸ்கோர்ஸில் பள்ளி அருகே காத்திருக்கு அபாயம்!
ADDED : ஜூன் 02, 2025 11:33 PM

குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
கோவை மாநகராட்சி, 22வது வார்டு, குமுதம் நகரில், கடந்த இரண்டு மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. வீடுகளுக்கான சோக்பீட் சாலையோரம், குடிநீர் குழாய் அருகே அமைக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலக்கிறது என தெரியவில்லை. சுகாதாரமற்ற குடிநீரால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- மார்க்கிரேட், குமுதம் நகர்.
சுகாதார கேடு
ராமநாதபுரம், சவுரிபாளையம் பிரிவில், குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடை அருகில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கியுள்ளது. இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- மனோகரன், சவுரிபாளையம்.
சர்க்கஸ் பயணம்
வெள்ளலுார், பட்டணம் மெயின் ரோடு, காந்தி நகர், இரண்டாவது வீதியில், மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. நடந்து செல்லவும், வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனஓட்டிகள், நடந்து செல்வோர் வழுக்கி விழுகின்றனர்.
- கிருஷ்ணா, வெள்ளலுார்.
சாலையை கடப்பதே சவால்
பட்டணம் தபால் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஸ்ரீ நகர் குடியிருப்பில் உள்ள சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளது. மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. வீட்டை விட்டு வெளியேறி பிரதான சாலையை அடைவதே பெரும் சவாலாக உள்ளது.
- தண்டபாணி, பட்டணம்.
ஆபத்தான மின் கம்பம்
செட்டிபாளையம் ரோடு, மாநகராட்சி 99வது வார்டு, ஜி.டி., டேங்க் பகுதியில் உள்ள மின் கம்பத்தின் (எண் 1) கீழ் பகுதி, சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை அகற்றிவிட்டு புது கம்பம் அமைக்க வேண்டும்.
- பத்ரி, செட்டிபாளையம்.
சாலையை சீரமைக்கணும்
ஆவாரம்பாளையம் ரோடு, எம்.ஜி.,ரோட்டில், சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
- சஞ்சய், ஆவாரம்பாளையம்.
தெருவிளக்கு பழுது
சிங்காநல்லுார், ஹவுசிங் யூனிட்டில், டீ கார்னர் சந்திப்பில், கடந்த ஐந்து நாட்களாக விளக்கு எரியவில்லை. பாதுகாப்பற்ற சூழலால், பெண்கள், முதியவர்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்கின்றனர்.வாகனஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
- சாத்விகா, சிங்காநல்லுார்.
பள்ளி அருகே ஆபத்து
ரேஸ்கோர்ஸ் ரோடு, நிர்மலா மெட்ரிக் பள்ளி அருகே, ஸ்மார்ட் பஜார் கடை எதிரே சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்து குழியாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்கடைக்குள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. பள்ளி அருகே மிகவும் ஆபத்தாக உள்ளதால், உடைந்த சிலாப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
- ராஜாராம்,
ரேஸ்கோர்ஸ்.
விளக்குகள் எரிவதில்லை
மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட, எழில்நகரில் உள்ள மின் கம்பங்களில் (எண் 15, 12, 7) விளக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எரிவதில்லை. இதை பயன்படுத்தி, இப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் அச்சப்படுகின்றனர்.
- விமலா,
சிங்காநல்லுார்.
தொற்றுநோய் அபாயம்
மாநகராட்சி 82வது வார்டுக்கு உட்பட்ட வெரைட்டி ஹால் ரோட்டில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது; துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- கார்த்திக், டவுன்ஹால்.
விழும்நிலையில் மின்கம்பம்
ராமநாதபுரம், 63வது வார்டு, பழநி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. கவுன்சிலர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- தர்மராஜ், ராமநாதபுரம்.
கால்வாயில் கட்டடக்கழிவுகள்
ஹோப் காலேஜ், 58வது வார்டு, துளசியம்மாள் லே- அவுட் ஒன்றில், சாக்கடை கால்வாயில் கட்டடக்கழிவுகள் மற்றும் டீ கப்கள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளது. கால்வாயை சுற்றிலும் அடர்த்தியாக புதர் வளர்ந்துள்ளது, கழிவுநீர் செல்ல வழியில்லாமல், தேங்கி நிற்கிறது.
- ரேணுகா, ஹோப்காலேஜ்.