/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு வெடிப்பதெல்லாம் சரி... அதன் குப்பையையும் சேகரிப்போம்
/
பட்டாசு வெடிப்பதெல்லாம் சரி... அதன் குப்பையையும் சேகரிப்போம்
பட்டாசு வெடிப்பதெல்லாம் சரி... அதன் குப்பையையும் சேகரிப்போம்
பட்டாசு வெடிப்பதெல்லாம் சரி... அதன் குப்பையையும் சேகரிப்போம்
ADDED : அக் 19, 2025 09:27 PM
கோவை: தீபாவளி பெரு மகிழ்வோடு கொண்டாடப்படும் பண்டிகை. பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் முக்கியம்.
தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசுகள் வெடிப்பதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், பொதுமக்களின் உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பேரியம் உப்புகளைக் கலந்து, தயார் செய்யப்பட்ட பட்டாசு தயாரிக்க, சேமிக்க, விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித்து, உச்ச நீதிமன்றம் 2021 அக்., 29ல் உத்தரவிட்டது. பசுமைப் பட்டாசு தயாரிப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, மத்திய அரசு வெளியிட்டது. இதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கைகள் இல்லை.
பசுமைப்பட்டாசுகள் வெடிக்கப்பட்டபோதும், அவற்றிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இடுபொருட்கள் உள்ளன.
சிவப்பு ஒளியை உருவாக்கும் லித்தியம், வெடிக்கும் ஒலியை அதிகரிக்கும் ஆன்டிமனி, வண்ணச்சிதறல்களை உருவாக்கும் பாதரசம், அடர்த்தியான ஒளி விளைவுகளை உருவாக்கும் ஆர்சனிக், வண்ணப்புகைகளை உருவாக்கும், ஈயம் போன்ற ரசாயனங்கள், பட்டாசுகளில் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
பட்டாசு வெடிக்கும்போது, ஏற்படும் குப்பையை நாம் யாரும் பொருட்படுத்துவதில்லை.
இது மழைக்காலம் என்பதால், பட்டாசுக் குப்பை மழை நீர் வடிகாலுக்கு கொண்டு செல்கிறது. இந்த குப்பை, வடிகால் மற்றும் சாக்கடையை அடைத்துக் கொள்கின்றன.
பட்டாசில் உள்ள ரசாயனப் பொருட்கள், மண் மற்றும் நீர்நிலைகளில் கலந்து, பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
நீர் நிலைகளில் பி.ஹெச்., அளவு மற்றும் அதன் ரசாயனப் பண்பை மாற்றுகின்றன. அந்த நீர்நிலைகளில் வாழும் மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, மாசுபாடு நிகழாமல் பாதுகாக்கும் பொறுப்பு, நமக்கு உண்டு. பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் அதே சமயம், நாம் வெடித்த பட்டாசு குப்பையைக் குவித்து, ஒரு பழைய சாக்கு, அட்டைப் பெட்டிகளில் சேகரித்து, ஓரமாக வைக்க வேண்டும்.
ஏனெனில், ஒரே நாளில் அனைத்து பட்டாசுக் குப்பையையும் அகற்ற, தூய்மைப் பணியாளர்களால் முடியாது. அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்து வருவதற்குள், காற்றில் அடித்துச் செல்லப்பட்டோ, நீரில் கலந்தோ மாசுபாடு ஏற்படும்.
எனவே, பொறுப்பு மிக்க குடிமக்களாக, நாம் வெடித்த பட்டாசுக் குப்பையை நாமே சேகரித்து வைத்து, தூய்மைப் பணியாளர்கள் வரும்போது கொடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு மாசுபடா பூமியை விட்டுச்செல்வோம்.