ADDED : பிப் 23, 2026 06:33 AM

'தன்னம்பிக்கையோடு தேர்வை சந்தித்தால், அதிக மதிப்பெண் பெறலாம்,'' என்கிறார், பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் விவேகானந்தன்.
அவர் கூறியதாவது:
தேர்வுக்கு முந்தைய நாள், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவற்றை தயாராக வைக்க வேண்டும். வினாத்தாளை முழுமையாக படித்து, எழுத்து பிழையின்றி, அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
இக்காலங்களில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே, தேர்வு நடக்கும் பள்ளிக்கு சென்று விடுவது நல்லது. தேர்வு மைய வளாகத்தில் கொண்டு சென்ற பாடக் குறிப்புகளை ஒரு முறை திருப்பி பார்க்கலாம். கடைசி நேரம் வீண் பதற்றம் அடைவதை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்பதற்காக, தேவையில்லாமல் வெவ்வேறு செய்திகளை திணிக்க கூடாது. ஒவ்வொரு வினாவுக்கும் விடையளிக்க எவ்வளவு நேரம் என்று திட்டமிட்டு கொண்டு, விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால், சில வினாக்களுக்கு பதில் தெரிந்தும், நேரமில்லாமில், விடை எழுதாமல் போகக் கூடிய சூழல் ஏற்படும்.
விடைகளை எழுதும்போது வினா எண்களை சரியாக எழுத வேண்டும். தெரிந்த வினாக்களுக்கான விடைகளை எழுதி முடித்த பின், தெரியாத வினாக்களுக்கான விடைகளை நினைவுக்கு கொண்டு வர முயற்சிக்கலாம். தேர்வு முடியும் வரை மொபைல் போனை தொட மாட்டேன் என சபதம் எடுப்பது நல்லது.
படித்ததை முறையாக, அழகாக, செம்மையாக தேர்வில் வெளிப்படுத்துவது ஒரு கலை. விடைகளை திருத்துபவர் வாசிப்பதற்கு முன், உங்களை அவருக்கு அறிமுகப்படுத்துவது உங்கள் கையெழுத்து.
அது அழகாக அமைந்தால் அதிகம் மதிப்பெண்கள் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு தேர்வை சந்தித்தால், அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விவேகானந்தன்
