சோமையம்பாளையத்தில் குடிநீரை பார்த்து நாளாச்சு! கிராம சபை முற்றுகைக்கு திட்டம்
சோமையம்பாளையத்தில் குடிநீரை பார்த்து நாளாச்சு! கிராம சபை முற்றுகைக்கு திட்டம்
UPDATED : ஆக 08, 2026 06:14 PM
ADDED : ஆக 08, 2026 06:11 PM

வடவள்ளி: சோமையம்பாளையம் ஊராட்சியில், 25 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில், சோமையம்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம், கஸ்தூரிநாயக்கன்பாளையம், குப்பநாயக்கன்பாளையம், ஆசிரியர் காலனி, நால்வர் நகர், சுல்தானியபுரம், மருதமலை அடிவாரம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில், வழக்கமாக 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. 25 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளதாக, பொதுமக்கள் கூறுகின்றனர்.
'குடிநீர் வினியோகம் கடந்த ஆறு மாதங்களாக முறையாக சரியில்லை. ஏப்ரல் இறுதியில் இருந்து மே இறுதி வரை குடிநீர் வரவில்லை. ஜூனில்தான் வந்தது. பின் ஜூலை துவக்கத்தில் நிறுத்தப்பட்டது.
காரணம் கேட்டால் ஊராட்சி நிர்வாகத்தினர் மிரட்டும் தொனியிலேயே பேசி வருகின்றனர். விநியோகிக்கப்படாத குடிநீருக்கு, குடிநீர் வரி செலுத்துகிறோம்.
சுதந்திர தின கிராம சபை கூட்டத்தன்று, அனைத்து கிராம மக்களும் ஒன்று கூடி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.
சோமையம்பாளையம் ஊராட்சி செயலர் (பொ) பிரகாஷிடம் கேட்டபோது, அத்திக்கடவு குடிநீரில், எங்கேயோ ஆயில் கலந்துவிட்டது. இதனால் அந்த குடிநீரை விநியோகிக்கவில்லை. அதற்கு பதிலாக, குடிநீர் வடிகால் வாரியத்திடம் அதிகளவு குடிநீர் கேட்டுள்ளோம். விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும், என்றார்.
