ADDED : ஜன 10, 2025 12:10 AM

மேட்டுப்பாளையம்; சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் வீட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 2 யானை தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றி, 5 பேரை கைது செய்தனர்.
கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிராஜ் நகர் பகுதியில், யானை தந்தங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பணியாளர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர், சிராஜ்நகர் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் யானை தந்தங்கள் இருந்தன. அவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். பின், யானை தந்தம் கடத்திய நபர்களை மேட்டுப்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் தேடி வந்தனர்.
இதில் கொளஸ் மைதீன், 47, ரவி, 47, வீரன், 47, கிருஷ்ணகுமார், 36, குமார், 45, ஆகிய 5 பேரை கைது செய்தனர். மணிகண்டன் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.--