/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ-பைலிங் முறைக்கு 'ஜேக்' எதிர்ப்பு !
/
இ-பைலிங் முறைக்கு 'ஜேக்' எதிர்ப்பு !
ADDED : நவ 26, 2025 07:12 AM
த மிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு(ஜேக்) பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களில், இ- பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், வரும் டிச.,1 முதல், கட்டாயமாக்குவதாக, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதை நிறுத்தி வைக்க வேண்டும்.
தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும், 28 ம் தேதி, வழக்கறிஞர்கள் பணியிலிருந்து விலகி இருந்து, அனைத்து நீதிமன்ற வாயில் முன்பாக கவனஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.
வழக்கறிஞர் சேமநல நிதியினை,10 லட்சத்திலிருந்து,25 லட்சம் ரூபாயாக, தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற அறிவுறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கொண்டு வரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையர் நீதியரசர் சத்யநாராயணன், ஆணையத்தின் அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக பெற்று வெளியிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் தலைவர், பொதுசெயலாளர், மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல், டிச., 20 ல், கும்பகோணத்தில் நடத்துவது என்றும், கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் தேர்தலை நடத்தி கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தேர்தலில் போட்டியிட, வேட்பாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வேட்பு மனுக்களும் பொதுக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் பின்னர் இறுதி நாளை தெரிவிப்பார்கள். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

