ADDED : ஜூலை 04, 2025 10:59 PM
கோவை ; சிவானந்தா காலனி பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்றவரை, மதுபோதையில் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவானந்தா காலனி, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 34. அதே பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, 2ம் தேதி சென்றார். மதுபோதையில் வந்த ஒரு வாலிபர், ராஜேஷை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மரக்கட்டையை எடுத்து ராஜேஷ் தலையில் அவ்வாலிபர் தாக்கினார். தொடர்ந்து இரும்பு கம்பியை எடுத்து, நெஞ்சில் குத்தியிருக்கிறார். ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை பார்த்த போதை வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடினார்.
ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ராஜேஷை தாக்கியது, சிவானந்தா காலனியை சேர்ந்த ஹரிஸ், 18 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.