/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனிமவள லாரிகளுக்கு சிறை; பொதுமக்கள் போராட்டம்
/
கனிமவள லாரிகளுக்கு சிறை; பொதுமக்கள் போராட்டம்
ADDED : மார் 21, 2025 10:28 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, கனிமவள லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் அதிகளவு கல்குவாரிகள் உள்ளன. இங்கு இருந்து பெரிய அளவிலான கற்கள், அரவை செய்வதற்காக கனரக வாகனங்கள் வாயிலாக, 'கிரஷர்'களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு இருந்து, டிப்பர் லாரிகளில், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. விதிமுறை மீறி அதிகளவு பாரம் ஏற்றிச் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், வேட்டைக்காரன்புதுாரில், அதிகளவு கனிமவளங்களை ஏற்றி வந்த இரு டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'கனிமவளம் கொண்டு செல்லும் லாரிகளால், ரோடுகள் சேதமடைகின்றன. இதனால், விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், ரோட்டில் உள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து சேதமடைகின்றன.
வாகனங்கள் வேகமாக செல்வதால் ரோட்டில் செல்லவே அச்சமாக உள்ளது. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி நேரமான காலை, 7:00 முதல், 10:00 மணி வரையும்; மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரையும் கனரக வாகனங்கள் இவ்வழியாக இயக்க கூடாது.
குடிநீர் குழாய்களை சீரமைத்து தரவும், ரோட்டை புதுப்பித்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி விசாரணைக்காக லாரிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.