/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துவங்கியது ஜமாபந்தி; மனு கொடுக்க மக்கள் ஆர்வம்
/
துவங்கியது ஜமாபந்தி; மனு கொடுக்க மக்கள் ஆர்வம்
ADDED : மே 20, 2025 11:55 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கிராமங்களின், நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி நேற்று துவங்கியது.
அதில், ராமபட்டிணம் உள்வட்டத்துக்கு உட்பட்ட புரவிபாளையம், சேர்வக்காரன்பாளையம், வடக்கிப்பாளையம், தேவம்பாடி, ராமபட்டிணம், மண்ணுார், குமாரபாளையம், திம்மங்குத்து, நல்லுாத்துக்குளி, அய்யம்பாளையம், ஜமீன் முத்துார், தாளக்கரை, போடிபாளையம், ராசிசெட்டிபாளையம், குளத்துார் பகுதி மக்கள் ஜமாபந்தியில் பங்கேற்றனர்.
மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் வாசுதேவன், நகராட்சி கமிஷனர் கணேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தாலுகா அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் மரக்கன்றுகளை நடவு செய்தார். அதன்பின், கிராம நில அளவை கம்பிகளை பார்வையிட்டார்.
ஜமாபந்தியில், நில அளவு, முதியோர் உதவித்தொகை, விதவைச்சான்று, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளி உபகரணம் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 115 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், மூன்று பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்கள், இரண்டு பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்கள் என மொத்தம், ஐந்து பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
ஜமாபந்தியில் வழங்கப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள, அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
* ஆனைமலை தாலுகாவில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் பாபு தலைமையில் ஜமாபந்தி நடந்தது.ஆனைமலை உள்வட்டத்துக்கு உட்பட்ட பெத்தநாயக்கனுார், தென்சித்துார், சோமந்துரை, தென்சங்கம்பாளையம், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. அதில், மொத்தம், 131 மனுக்கள் பெறப்பட்டன.
*கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், வடசித்தூர் உள்வட்டத்துக்கு நேற்று, ஜமாபந்தி நடந்தது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் (பொறுப்பு) விஸ்வநாதன் தலைமை வகித்தார். கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். வடசித்தூர் உள்வட்டத்தில், மொத்தம், 83 மனுக்கள் பெறப்பட்டன.
உடுமலை
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில், நேற்று ஜமாபந்தி துவங்கியது. தாசில்தார் கவுரிசங்கர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதல் நாளான நேற்று, உடுமலை உள்வட்டத்திற்குட்பட்ட, சின்னவீரம்பட்டி, குறிஞ்சேரி, அந்தியூர், வெனசப்பட்டி, கணபதிபாளையம், உடுமலை, பெரியகோட்டை, கணக்கம்பாளையம், தென் பூதிநத்தம், பூலாங்கிணர், ராகல்பாவி, ரா.வேலூர், வடபூதிநத்தம் போடிபட்டி, கண்ணமநாயக்கனுார் 1 மற்றும் 2 ஆகிய கிராமங்களுக்கு நடந்தது.
இதில், கணக்கம்பாளையத்தை நகராட்சியுடன் இணைக்க வேண்டும். அந்தியூர் கிராமத்தில் அரசு பஸ் நிறுத்தவும், குடிநீர் வினியோகம் சீராக மேற்கொள்ள வேண்டும் மற்றும் முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
*மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு ஜமாபந்தி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில், மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
மடத்துக்குளம் உள்வட்டம் சங்கரராமநல்லுார் வடக்கு, சங்கரராமநல்லுார் தெற்கு, கொழுமம், சோழமாதேவி, பாப்பான்குளம், கொமரலிங்கம் கிழக்கு, கொமரலிங்கம் மேற்கு, வேடபட்டி, சர்க்கார்கண்ணாடிபுத்துார், அக்ரஹார கண்ணாடிப்புத்துார் கிராம மக்கள் மனு கெடுத்தனர்.