/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3 தாலுகாக்களில் ஜமாபந்தி; 359 மனுக்கள் ஒப்படைப்பு
/
3 தாலுகாக்களில் ஜமாபந்தி; 359 மனுக்கள் ஒப்படைப்பு
ADDED : மே 22, 2025 12:09 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில், 209 மனுக்கள் பெறப்பட்டன.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. நேற்று வடக்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.
ஈமச்சடங்கு அறக்கட்டளை அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி மின்மயானத்தில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சடலத்தை எரியூட்ட விண்ணப்ப கட்டணமாக, 250 ரூபாய், எரியூட்ட, 500 ரூபாயும், டிரஸ்ட்டுக்கு, 1,750 ரூபாய்; அமரர் ஊர்திக்கு, 2,000 ரூபாய் என மொத்தமாக, 4,500 ரூபாய் செலவாகிறது. அரை மணி நேரம் தாமதமானால், 6,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இறந்த பிறகும் கூட சடலம் எரியூட்ட அதிக கட்டணம் வசூலிப்பது வேதனையாக உள்ளது. தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
மரங்கள் பாதுகாப்புக்கான கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவிலில் பழமையான மரம் முறையாக அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமாபந்தியில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளி உபகரணம் தேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 142 மனுக்கள் பெறப்பட்டன.
* ஆனைமலை தாலுகாவில், மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேற்று ஜமாபந்தி நடந்தது. அதில் மொத்தம், 67 மனுக்கள் பெறப்பட்டன.
*கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், கிணத்துக்கடவு உள்வட்டத்துக்கான ஜமாபந்தி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் (பொறுப்பு) விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடந்தது. தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் பங்கேற்று பட்டா மாறுதல், பொது பிரச்னைகள் குறித்து, மனுக்கள் வழங்கினர். மொத்தமாக, 150 மனுக்கள் பெறப்பட்டன.
இன்றைய ஜமாபந்தி
பொள்ளாச்சி தாலுகாவில், தெற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கிராமங்களுக்கு இன்று ஜமாபந்தி நடக்கிறது.
ஆனைமலை தாலுகாவில், கோட்டூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட சமத்துார், பில்சின்னாம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், தளவாய்பாளையம், பழையூர், தென்குமாரபாளையம், வீரல்பட்டி, தொண்டாமுத்துார், கம்பாலபட்டி, கரியாஞ்செட்டிபாளையம், கோட்டூர், அங்கலகுறிச்சி, துறையூர், ஜல்லிபட்டி, அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடக்கிறது.
கிணத்துக்கடவு தாலுகாவில், கோவில்பாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.