/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவுவது போல் நடித்து ரயிலில் நகை, பணம் திருட்டு
/
உதவுவது போல் நடித்து ரயிலில் நகை, பணம் திருட்டு
ADDED : ஜன 22, 2025 11:58 PM
கோவை; ரயிலில் பயணித்த பெண்ணுக்கு, உதவுவது போல் நடித்து, நகை பணத்தை திருடிய பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
போத்தனுாரை அடுத்த செட்டிபாளையம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் காசி; மனைவி சங்கீதா, 30. இவர் சில நாட்களுக்கு முன், மொரப்பூர் சென்றிருந்தார். பின்னர், கடந்த 20ம் தேதி மொரப்பூரில் இருந்து, ரயிலில் கோவை புறப்பட்டார்.
ரயிலில் வந்த போது, பக்கத்து இருக்கையில் இருந்த ஒரு பெண், சங்கீதாவிடம் பேச்சு கொடுத்தார். இருவரும் பேசிக்கொண்டே பயணம் செய்தனர். கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், சங்கீதா தனது இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த பெண், சங்கீதாவுக்கு உதவுவதாக கூறி, அவரின் ஒரு பையை தான் எடுத்து வருவதாக கூறி வாங்கியுள்ளார். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அந்த பெண் சங்கீதாவிடம் பையை கொடுத்து சென்று விட்டார். சங்கீதா தனது பையில் இருந்து, பணம் எடுப்பதற்காக திறந்து பார்த்த போது, அதிலிருந்த ரூ. 35 ஆயிரம் பணம், தங்க கம்மலை காணவில்லை.
சங்கீதா அளித்த புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

