ADDED : மார் 08, 2026 05:27 AM

தொண்டாமுத்தூர்: சாடிவயல் யானைகள் முகாமுக்கு, முதுமலையில் இருந்து, ஜான் என்ற கும்கி கொண்டு வரப்பட்டுள்ளது.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயலில், 8 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் யானைகள் முகாம் அமைக்கப்பட்டது.
பல மாதங்கள் காத்திருப்பிற்கு பின், கடந்த டிச.,ல், திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், கும்கி யானைகள் கொண்டு வரப்படாமல், யானைகள் முகாம் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த, பிப்., 26ம் தேதி, டாப்சிலிப், கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து, முத்து மற்றும் காவேரி ஆகிய இரண்டு கும்கி யானைகள், சாடிவயலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், முதுமலை யானைகள் முகாமில் இருந்து ஜான்,35 என்ற கும்கி யானை நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது.
அதோடு, இம்மாத இறுதிக்குள், முதுமலையில் இருந்து சுமங்கலா என்ற கும்கியும் அழைத்து வரப்பட உள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
