/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறப்பு விழாவுக்கு பின் திறக்கப்படாத ஜோதிநகர்: மின்வாரிய அலுவலகம் பூட்டியே கிடப்பதால் அலைமோதும் நுகர்வோர்
/
திறப்பு விழாவுக்கு பின் திறக்கப்படாத ஜோதிநகர்: மின்வாரிய அலுவலகம் பூட்டியே கிடப்பதால் அலைமோதும் நுகர்வோர்
திறப்பு விழாவுக்கு பின் திறக்கப்படாத ஜோதிநகர்: மின்வாரிய அலுவலகம் பூட்டியே கிடப்பதால் அலைமோதும் நுகர்வோர்
திறப்பு விழாவுக்கு பின் திறக்கப்படாத ஜோதிநகர்: மின்வாரிய அலுவலகம் பூட்டியே கிடப்பதால் அலைமோதும் நுகர்வோர்
ADDED : நவ 27, 2025 04:56 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜோதிநகரில், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடப்பதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி கோட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக, மின்வாரிய அலுவலகம் பிரிக்கப்பட்டு, புதியதாக பிரிவு அலுவலகங்கள் துவங்கப்பட்டன. அதில், ரங்கசமுத்திரம் பிரிவு அலுவலகத்தில் இருந்த காந்திபுரம், ஜோதிநகர், மோதிராபுரம் மற்றும் கிராமங்கள், பொள்ளாச்சி அலுவலகத்தில் இருந்து, மாக்கினாம்பட்டி போன்ற பகிர்மானங்கள் பிரிக்கப்பட்டு, ஜோதிநகர் பிரிவு அலுவலகத்தில் சேர்க்கப்பட்டது.
ஜோதிநகர் 100 அடி ரோட்டில், உதவி செயற்பொறியாளர் பிரிவு அலுவலகம் கடந்த செப். மாதம், 29ம் தேதி துவங்கப்பட்டது. இங்கு மின்நுகர்வோர்கள் மாதாந்திர மின் கட்டணம், அனைத்து மின் கட்டணங்களையும் செலுத்தி பயன்பெறலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அலுவலக கட்டடம் திறப்பு விழா அன்று திறக்கப்பட்டதாகவும், அதன்பின் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
ரங்கசமுத்திரம் மின்வாரிய அலுவகலத்தில் இருந்து பிரித்து, ஜோதிநகர் பிரிவு அலுவலகம் துவங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தோம். இனி அலைச்சல் இருக்காது, ஜோதிநகர் அலுவலகத்திலேயே மின் கட்டணம் செலுத்தலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், திறப்பு விழா அன்று மட்டுமே அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்பின், பூட்டியே கிடக்கிறது. ரங்கசமுத்திரத்தில் இருந்து பிரித்ததால், சர்வீஸ் எண் மாறியுள்ளது. இதை பற்றி தகவல் அறிய ஜோதிநகர் அலுவலகம் வந்தால் பூட்டியிருப்பதை கண்டு மீண்டும் ரங்கசமுத்திரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
மேலும், மின்கட்டணம் அனைத்தும் செலுத்த ரங்கசமுத்திரமே செல்ல வேண்டியதுள்ளது. இதனால், வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இணையதள வசதி உள்ளிட்டவை மேற்கொள்ளாததாலும், ஆட்கள் பற்றாக்குறையால், அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'வரும், 1ம் தேதி முதல் ஜோதிநகர் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதுமான ஆட்கள் நியமித்து முழுமையாக செயல்படும்,' என்றனர்.

