முத்தண்ணன் குளக்கரையில் கபடி... கபடி!மாநகராட்சிக்கு கிடுக்கிப்பிடி
முத்தண்ணன் குளக்கரையில் கபடி... கபடி!மாநகராட்சிக்கு கிடுக்கிப்பிடி
UPDATED : ஜூலை 26, 2026 07:04 PM
ADDED : ஜூலை 26, 2026 07:02 PM

கோவை: குளக்கரைகளை பொழுதுபோக்கிடமாக மாற்றும் முயற்சியில் வணிக நோக்கம் இருப்பதாக, மாநகராட்சிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் முத்தண்ணன் குளக்கரையில் கபடி மைதானம் அமைக்கும் திட்டம், கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோவையில் உள்ள குளங்களை பராமரிக்க நிதியின்றி, பொதுப்பணித்துறை தவித்தது. அச்சமயத்தில், நகரில் உள்ள குளங்களை தங்கள் வசம் ஒப்படைக்க மாநகராட்சி கோரியது. பராமரிப்பு பணிக்காக, நகர் பகுதியில் உள்ள 9 குளங்களை, 99 ஆண்டு குத்தகைக்கு பொதுப்பணித்துறை வழங்கியது.
கிட்டத்தட்ட ரூ.500 கோடியை மாநகராட்சி செலவழித்து, குளங்களை பொழுதுபோக்கிடமாக மாற்றியது. இவ்விடங்களை சமீபகாலமாக வணிக நோக்கில் மாநகராட்சி பயன்படுத்துவது, விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நீர் நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்பு குறித்து கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் இதற்கு முன் தொடர்ந்த வழக்கு தீர்ப்பின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
அதன்பின், 'ஸ்மார்ட் சிட்டி' என்கிற பெயரில் மாநகராட்சியே புதுவித ஆக்கிரமிப்பை உருவாக்கி வருகிறது. நீர்த்தேக்கும் பரப்பை குறைத்திருப்பதோடு, நீதிமன்ற உத்தரவின் நோக்கத்தையும் பாதித்துள்ளது.
இது தொடர்பாக கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில், 'குளங்களின் கரைகளை வலுப்படுத்துவது, நடைபாதை அமைப்பது எதிர்கால ஆக்கிரமிப்பை தடுக்க உதவும். மீதமுள்ள பகுதிகளை நீர் தேங்கும் பகுதியாக பாதுகாக்க வேண்டும்.
மாறாக, பொழுதுபோக்கு வசதிகள் நீர்த்தேக்கும் பகுதிக்குள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவக வளாகங்கள், கூடைப்பந்து, மைதானம், திறந்தவெளி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை குளங்களுக்கு வெளியே அமைக்கலாம்.
முத்தண்ணன் குளத்தில் கபடி மைதானம் அமைப்பதை கைவிட வேண்டும். குளங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உருவாக்கிய கட்டுமானங்கள், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நீர்த்தேக்கும் பகுதியில் வணிக நோக்கில் எந்த திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது' என கூறியுள்ளார்.
