ADDED : ஜன 22, 2026 05:30 AM

வால்பாறை: அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோட்டில், பகல் நேரத்தில் ஜாலியாக வாக்கிங் சென்ற கபாலி யானையை கண்டு சுற்றுலாபயணியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு சுற்றுலா பயணியர் செல்கின்றனர்.
கேரள மளுக்கப்பாறையிலிருந்து அதிரப்பள்ளி அருவி செல்லும் ரோட்டில், கடந்த சில மாதங்களாக 'கபாலி' என பெயரிடப்பட்ட ஒற்றை யானை அடிக்கடி ரோட்டில் உலா வருகிறது. இதனால், சில நேரங்களில் வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோட்டில் 'கபாலி' யானை ஜாலியாக வாக்கிங் சென்றது. பகல் நேரத்தில் ரோட்டில் நடந்து வந்த யானையை கண்டு, சுற்றுலா பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால், சிறிது துாரம் சென்ற பின் அங்குள்ள தோட்டத்தில் யானை புகுந்ததால் நிம்மதியடைந்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'அதிரப்பள்ளி அருகே உள்ள, 'கபாலி' யானை, யாரையும் தொந்தரவு செய்வதில்லை. ரோட்டில் யானையை கண்டதும் ஒதுங்கி நின்றால் அதுவாக வழிவிட்டு செல்லும். தேவையில்லாமல் யானையை தொந்தரவு செய்யக்கூடாது.
மீறினால் வன உரியின பாதுகாப்ப சட்டப்படி சுற்றுலா பயணியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
