/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைலாயம் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம்!
/
கைலாயம் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம்!
ADDED : ஆக 29, 2025 01:20 PM

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, கடந்து இரண்டு வாரங்களாக 'கைலாய புனித யாத்திரையை' மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையின் இடையே, அவர் நடிகர் மாதவனுடன் ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடும் போது, “கைலாயம் என்பது இந்த பூமியிலேயே அல்லது இந்த பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம்” என்று கூறினார்.
சத்குருவுக்கு அண்மையில் இரண்டு சவாலான மூளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிறகு சத்குரு முதன்முறையாக 17 நாள்கள் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம், கடினமான கைலாய மலை யாத்திரையை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் இடையில் நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் ஆகியோருடன் அவர் ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினர்.
நடிகர் ஆர். மாதவனுடன் சத்குரு பேசும் போது “கைலாயம் என்பதை வார்த்தைகள் மூலம் யாராலும் விளக்கவோ விவரிக்கவோ முடியாது. கைலாயம் எப்படிபட்ட இடம் என்றால், ஆதியோகி சிவனே முழுமையாக இருக்க கூடிய இடம். இதனை இந்த பூமியிலேயே அல்லது இந்த பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம் என்று கூறமுடியும். சிவனின் ஜடாமுடி என்று கூட சொல்லலாம், ஒவ்வொரு இழையிலேயும் ஞானம் சேமிக்கப்பட்டு இருக்கின்றது. அது வேறுவிதமான ஒரு ஞான நிலை, இந்த பிரபஞ்சம் குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பும் அனைத்தும் அங்கு இருக்கின்றது.” எனக் கூறினார்.
சத்குருவுடன் கலந்துரையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி, “இரண்டு பெரிய மூளை அறுவைச் சிகிகச்சைக்கு பிறகு, சத்குருவின் இந்த கைலாஷ் யாத்திரை பிரமிக்க வைக்கிறது” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “மோட்டார் சைக்கிள் என்ற இயந்திரம் மற்றும் உங்களின் உடல் என்ற இயந்திரம் இரண்டும் எப்படி இருக்கின்றது என சத்குருவிடம் வினவினார். இதற்கு பதிலளித்த சத்குரு, “இது தான் யோகாவின் சக்தி, இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு இதை எல்லாம் செய்ய முடிகிறது. ஏற்கனவே ஜூன் மாதத்தில் கனடாவில் நீண்ட பயணம் மேற்கொண்டேன், அது என்னால் சமாளிக்க முடியுமா என்று சோதித்து பார்க்கத்தான், அதை என்னால் நன்றாகவே சமாளிக்க முடிந்தது. இந்த யாத்திரையையும் நன்றாகவே செய்து முடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” எனக் கூறினார்.
இந்தியா - சீனா மோதல்கள் தொடர்ந்து வந்ததால் கடந்த 5 வருடங்களாக நேரடியாக கையலாய யாத்திரை செல்ல முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது உருவாகி வரும் இணக்கமான உறவினால் கடந்த ஜூன் மாதம் முதல்
திபெத் வழியாக கைலாஷ் யாத்திரை பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய யாத்ரீகர்கள் மீண்டும் கைலாஷ் மலைக்கு ஆன்மீக பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சூழலில் இந்தாண்டு சத்குரு கைலாய மலைக்கு மோட்டார் சைக்கிளில் மூலம் யாத்திரை மேற்கொண்டார். அவர் யாத்திரை மேற்கொண்ட பாதையானது, கரடுமுரடான, ஆபத்துகள் நிறைந்த பாதை மற்றும் கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 15,000 இருந்து 20,000 அடி வரையுள்ள உயரமானப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அசாத்தியமான 17 நாள் பயணம், யோகாவின் சக்தியால், நினைத்துப் பார்க்க முடியாததைக் கூட அடைய முடியும் என்பதை நிரூபிக்கின்றது.

