/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமராஜர் பிறந்த நாள் விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
/
காமராஜர் பிறந்த நாள் விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 09:23 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், 123வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த, காமராஜர் பிறந்த நாள் விழாவில், தலைமையாசிரியர் சித்ரா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாண்டியம்மாள் முன்னிலை வகித்தார். மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
* கோடங்கிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், காமராஜர் உருவ படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி நன்கொடையாளர் ரங்கசாமி, காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்கள் தரணீஷ், திவிஷ்குமார், தெபோராள், காமராஜரின் சிறப்பு குறித்து பேசினர். காமராஜர் வேடமணிந்து மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் சத்தியா, காமராஜரின் சேவைகள், தொண்டுகள், கல்வி வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கினார். தலைமையாசிரியர் தினகரன் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
* ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் சண்முகசுந்தரம் வரவேற்றார். காமராஜரின் கல்வி சேவைகள் குறித்து விளக்கப்பட்டது. கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஸ்ரீராமஜெயம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். டாக்டர் பூபதி சபரீஷ், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் மற்றும் பலர் பங்கேற்றனர். கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
* த.மா.கா., சார்பில், பாலகோபாலபுரம் நகராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. நகர தலைவர் சுப்பராயன், மாவட்ட தலைவர் குணசேகரன், வால்பாறை மாவட்ட தலைவர் பழனிசெவ்வேல், உயர்மட்ட குழு உறுப்பினர் கன்னிமுத்து, மாவட்ட செயலாளர் செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* காங்., கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. டி.இ.எல்.சி.,பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட காங்., தலைவர் பகவதி தலைமை வகித்தார். நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர்.
* பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், கோவை தெற்கு மாவட்ட காங்., மனித உரிமை துறை சார்பில் நடந்த விழாவில், தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி வாழ் நாடார் சங்கம், தமிழ்நாடு பனை, தென்னை தொழிலாளர் நாடார் சங்கம், கோவை நாடார் சங்கம் சார்பில், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன்பாக விழா நடந்தது. தமிழ்நாடு பனை தென்னை தொழிலாளர் சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் சதீஸ்குமார் வரவேற்றார். பொள்ளாச்சி நாடார் சங்க தலைவர் செல்வகுமார், காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார். கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம் மாநில பொதுச் செயலாளர் பேச்சிமுத்து பேசினார். தலைவர் கனகராஜ், ஏழை பெண்களுக்கு புடவை வழங்கினார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* சூளேஸ்வரன்பட்டியில், பொள்ளாச்சி அபெக்ஸ் சங்கம் சார்பில் நடந்த விழாவில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர் ட்ரம், குக்கர், நாற்காலிகள் வழங்கப்பட்டன. மைய பொறுப்பாளர் ராஜலட்சுமி வரவேற்றார். தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். துணை செயலாளர் சங்கர் ராஜா, சேவை திட்ட இயக்குனர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.