ADDED : செப் 01, 2026 08:02 PM
கோவை: மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட, 20 வார்டுகளில் நேற்று கொசுப்புழு பெருக்கம் அதிகமுள்ள பகுதி நீர்நிலைகளில் ‘கம்பூசியா’ மீன்கள் விடும் வேலை நடந்தது.
மாநகர் நல அலுவலர் கூறியிருப்பதாவது:
மலேரியா, டெங்கு கொசுக்களை அழிக்கக்கூடிய கம்பூசியா மீன்கள் மாவட்ட சுகாதார அலுவலகம், கல்வீரம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு கிணற்றில் 2 ஆண், 8 பெண் மீன்கள் விடப்படும். வளர்ந்த மீன், 100 முதல் 300 கொசு புழுக்களை உண்ணும். இந்த மீன் விடப்பட்ட கிணறு மற்றும் நீர்நிலைகளில் பிளீச்சிங் பவுடர், ஆயில் தெளிக்கக்கூடாது.
இதற்காக 10 ஆயிரம் மீன்கள், மாநகர் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விடப்படும். மாநகராட்சியில் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் இந்த மீன்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
