/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை-ஊட்டி பைபாஸ் சாலை திட்டம்
/
காரமடை-ஊட்டி பைபாஸ் சாலை திட்டம்
ADDED : டிச 01, 2024 11:44 PM

மேட்டுப்பாளையம்; காரமடையில் இருந்து, ஊட்டி சாலை சென்றடையும் வகையில், பைபாஸ் சாலை அமைக்க மத்திய அரசு, முடிவு செய்துள்ளது. பைபாஸ் சாலை அமையும் இடங்களை ஆய்வு செய்வது குறித்து, விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.,) தயார் செய்ய, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் டெண்டர் விட, தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் பாலமாக, மேட்டுப்பாளையம் உள்ளது.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பஸ்களும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்று வருகின்றன. இதனால் மேட்டுப்பாளையம் நகரில், காலை, மாலையிலும், விடுமுறை நாட்களிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு நீலாம்பூர் பைபாஸ் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்து. விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டது.
அதன் பின், 2014ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பைபாஸ் சாலை திட்டத்தை அறிவித்தார். சாலை அமைக்க நிலங்கள் ஆஜிதம் செய்யும் இடங்களின் உரிமையாளர்களுக்கு கொடுக்க, 99 கோடி ரூபாயும், காரமடை சாலை குட்டையூரில் இருந்து அன்னுார், சிறுமுகை, கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி சாலையை சென்றடையும் வகையில், சாலை அமைக்க, 200 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது.
அதிகாரிகள் நில அளவை செய்து, ஆர்ஜிதம் செய்ய காலம் கடத்தி வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், நிலம் கையகப்படுத்த விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. திட்டம் அறிவித்து பல ஆண்டுகள் ஆனதால், நிலத்திற்கு வழங்கப்படும் தொகையின் மதிப்பும், பைபாஸ் சாலை அமைக்கும் திட்டத்தின் மதிப்பும், 600 கோடி ரூபாயாக உயர்ந்தது. பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
299 கோடி ரூபாயில் முடிக்க வேண்டிய பைபாஸ் சாலை திட்டம், 600 கோடியாக திட்ட மதிப்பீடு உயர்ந்ததால், தமிழக அரசு இத்திட்டத்தை செய்ய முடியாது என கைவிட்டு, மத்திய அரசிடம் ஒப்படைத்தது. மேட்டுப்பாளையத்தில், பைபாஸ் சாலை அமைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி முன்னாள் நகர மன்ற தலைவர் சத்தியவதி கணேஷ் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை சுமார், 8 கிலோமீட்டரில் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
சாலை அமைக்கும் பகுதியில் அளவீடு செய்து, இரண்டு பக்கம் கற்கள் நட்டனர். கடந்த 16 ஆண்டுகளாக பைபாஸ் சாலை பணி துவங்கவில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக பைபாஸ் சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்ட பொறியாளர் முரளி குமார் கூறுகையில், '' காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக, ஊட்டி சாலை சென்றடையும் வகையில், பைபாஸ் சாலை அமைக்க மத்திய அரசு, முடிவு செய்துள்ளது.
பைபாஸ் சாலை அமையும் இடங்களை ஆய்வு செய்வது குறித்து, விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.,) தயார் செய்ய, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் டெண்டர் விட, தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.
வல்லுனர் குழுவினர் இடத்தை ஆய்வு செய்து, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பி வைப்பர். அந்த அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன் பிறகு நிலம் எடுப்பும், பைபாஸ் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.